சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா இன்று (மே 6) காலை 9:30 மணிக்கு வெளியிட்டார். இதில், மாநிலம் முழுவதும் 94.56 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை மே 9ஆம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் பிறந்ததேதி மற்றும் பதிவெண் ஆகிய விபரங்களைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தங்களின் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விபரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திலிருந்து மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பள்ளி வழியாகவும் மற்றும் தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களின் மூலமாகவும் மே 7ஆம் தேதி காலை 11 மணி முதல் 11ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்துகொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாயும், ஏனையப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 205 ரூபாயும் செலுத்த வேண்டும். இதற்கான கட்டணத்தைப் பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டினை பயன்படுத்தியே www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திலிருந்து அறிவிக்கப்படும் நாளில் பதிவிறக்கம் செய்ய முடியும்" என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:+2 தேர்வில் 3வது முறையாக முதலிடம் பிடித்த திருப்பூர்.. எத்தனை பர்சன்டேஜ் தெரியுமா?