சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை 10.12 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. நாளை (டிச.15 ) மாலை சுமார் 4.00 மணியளவில் முகலிவாக்கம் எல் & டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தலைவர்கள்
இந்நிலையில், அவருடைய உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், தாமோ அன்பரசன், மா. சுப்பிரணியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ, கேவி தங்கபாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் சிவகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, '' ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழப்பு ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. எந்த கருத்தானாலும் அதை சிறப்பாக பேசக்கூடியவர். அரசியலில் தேசியவாதியாக இருந்தாலும் நல்ல பகுத்தறிவுவாதி அவர். அவருடைய இறப்பு காங்கிரஸ் பேரியத்துக்கு மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்குமான இழப்பு. அவருடைய குடும்பத்திற்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்'' என கூறினார்.
மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.