தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

138 ஆண்டுகளை கடந்த மதுரையின் உயிர்நாடியான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்.. - பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை! - MADURAI ALBERT VICTOR FLYOVER

மதுரையின் அடையாளமாகத் திகழும் நூற்றாண்டு பெருமை வாய்ந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும்படி சமூக ஆர்வலர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை. அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

மதுரையின் உயிர்நாடியான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்
மதுரையின் உயிர்நாடியான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 7:59 AM IST

மதுரை:மதுரையின் அடையாளமாகத் திகழும் நூற்றாண்டு பெருமை வாய்ந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும்படி சமூக ஆர்வலர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலும், வைகை ஆறும் மதுரை மாநகரின் அடையாளமாக என்றென்றும் திகழ்பவை. அதிலும் குறிப்பாக மதுரை மாநகரை வடக்கு, தெற்காக பிரிக்கும் வைகை ஆறு மதுரையின் உயிரோட்டமாகும். கனமழை மற்றும் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில் மதுரையின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே கடந்த 1886-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி அடித்தளம் அமைக்கப்பட்டதுதான் ஏவி மேம்பாலம் என்று அழைக்கப்படும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்.ஆல்பர்ட் விக்டரின் மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நாளையுடன் 139 ஆண்டுகள் ஆவதை முன்னி்டடு, இதனை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இளவரசர் ஆல்பர்ட் விக்டர்:இன்றைக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்தப் பாலம் மதுரை நகரின் சமூக, பொருளாதார, கல்வி, ஆன்மீக, அரசியல் மேம்பாட்டிற்கான உயிர்நாடியாக திகழ்கிறது. இதுகுறித்து பேசிய மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன், "3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நகர் என்ற தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது மதுரை நகராகும். வைகை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் அமைந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் 130 ஆண்டுகளைக் கடந்த பழம் பெருமைக்குரிய சின்னமாக விளங்குகிறது.

அப்போது வைஸ்ராயாக இருந்த எர்ல் ஆஃப் டஃப்ரைன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் கடந்த 1886-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி இந்தப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 250 மீ நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டது. பிறகு 1889ஆம் ஆண்டு இந்தப் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அன்றைக்கு வேல்ஸ் இளவரசராக இருந்த ஆல்பர்ட் விக்டரின் பெயரைச் சூட்டி திறந்து வைக்கப்பட்டது,"என்றார்.

ஆல்பர்ட் விக்டர் மருத்துவமனை:மேலும் பேசிய அவர், "ஏ.வி.மேம்பாலத்தை மரபுச் சின்னமாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அன்றைய பிரிட்டிஷார் ஆண்ட நாடுகளில் இளவரசர் ஆல்பர்ட் விக்டரின் பெயரில் மூன்று நினைவுச் சின்னங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று இங்கிலாந்திலும், மற்ற இரண்டும் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில்தான் உள்ளன. ஒன்று ஏ.வி.மேம்பாலமும், மற்றொன்று ராமநாதபுரம் சமஸ்தானத்தால் மதுரை மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட முதல் இலவச மருத்துவமனை ஆகும். இது ஆல்பர்ட் விக்டர் பெயரால் துவங்கப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மகால் எதிரே அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தில் இப்போது பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி தற்போது செயல்படுகிறது

பாலத்தின் மதிப்பீடு ரூ.3 லட்சம்:மேலும் இதுகுறித்து நம்மிடம் பேசிய வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன், "ஏ.வி.பாலம் இந்த ஆண்டோடு 138 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 50 ஆண்டுகள் மட்டுமே இந்தப் பாலத்திற்கான ஆயுள் என்று மதிப்பீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் தற்போது 138 ஆண்டுகளைக் கடந்தும் சிறிய குறைகளைத் தவிர இன்றும் வலுவோடு இருக்கிறது. . மதுரையின் கோட்டைச் சுவர்களை இடித்து, அதிலுள்ள கற்களைக் கொண்டு வைகையாற்றுக்குள் முதல் முறையாக தரைமட்டத்தில் கல்பாலம் அமைக்கப்பட்டது. பிறகு மழை, வெள்ளம் போன்ற பருவமழை காலங்களில் மக்களின் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டதால் உயர்மட்டப்பாலம் அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க:"கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" - அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு!

பாலத்தின் கட்டுமானத்திற்காக ஆங்கில அரசால் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2,85,697 செலவான நிலையில் மீதமுள்ள ரூ.14,303 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டதாக பிரிட்டிஷ் காலத்து ஆவணங்கள் கூறுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய கட்டுமான முறையில் பயன்படுத்தப்படும் சுர்க்கி, சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம், முட்டை வெள்ளைக்கரு ஆகியவற்றையும் கருங்கற்களையும் பயன்படுத்தியே இந்தப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மதுரையின் அனைத்துப் பாலங்களும் மூடப்பட்டிருந்தபோதும்கூட, இந்த ஒரு பாலம்தான் முழுவதுமாக திறந்து வைக்கப்பட்டு, நிறைய பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

பராமரிப்பு தேவை: ஆனால் கடந்த 50 ஆண்டு காலமாக இந்தப் பாலத்திற்கு வெள்ளையடிப்பதைத் தவிர எந்தவித பராமரிப்பும் செய்யப்படுவதில்லை. இதனால் பாலத்தின் பல்வேறு பகுதிகளில் பலவீனமடைந்துள்ளன. குறிப்பாக 2 மற்றும் 7, 8ஆம் வளைவுகளின் அடித்தளப் பகுதி மிகவும் பழுதடைந்துள்ளது. அதே போன்று பாலத்தின் கைப்பிடிச்சுவர்கள் ஆங்காங்கே உடைந்து கம்பிகளாக வெளியே தெரிகின்றன. மேலும் நடைபாதைக்கும், சாலைக்கும் இடையே ஒன்றரை அடி உயரம் இருந்த நிலையில், இன்று இரண்டும் சமமாக மாறிவிட்டன. ஆகையால் உடனடியாக இவற்றையெல்லாம் சரி செய்து, யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்" என்றார்.

முதன்மை அடையாளம்: மேலும் நம்மிடம் பேசிய வரலாற்றுத்துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன், "மதுரையின் சமூக, பொருளாதார வளர்ச்சியின் அடையாளம்தான் ஏ.வி.மேம்பாலம். மதுரையை இரண்டாகப் பிரிக்கும் வைகையாற்றின் மேல் வடகரை மற்றும் தென்கரையை இணைக்கும் வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. 130 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட முழு பயன்பாட்டில் பாலம் உள்ளது. தமிழகத்தின் முதன்மை கட்டுமானங்களுள் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திற்கும் முக்கிய பங்குண்டு. ஆகையால் இதனை தொல்லியல் பெருமையாக மட்டுமன்றி, மரபுச் சின்னமாகவும் அறிவிக்க வேண்டும்,"என்றார்.

ABOUT THE AUTHOR

...view details