தஞ்சாவூர்: நாய், பூனை, ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளைச் செல்லப்பிராணிகளாக தங்களது வீட்டில் வளர்ப்பது வழக்கம். குறிப்பாக, அதற்கு செல்லமாக பெயர்களையும் வைத்து, வீட்டில் ஒரு நபரைப் போல வளர்த்து வருகின்றனர். ஆனால், அதில் ஒருபடி மேலே சென்று தஞ்சையைச் சேர்ந்த மேத்யூ என்ற இளைஞர் வெளிநாட்டு வகைகளைச் சேர்ந்த செல்லப்பிராணிகளையும் ஆர்வத்துடன் வளர்த்து வருகிறார்.
அதாவது, தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால், கால்நடைகள் மட்டுமின்றி கோழி, புறா ஆகிய இனங்களும் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் தங்கள் வீட்டிலேயே வெளிநாட்டுப் பறவைகள், மீன்கள் உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருவது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்லப்பிராணிகள் வளர்க்கும் இளைஞர் மேத்யூ பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அந்த வகையில், தஞ்சாவூர் காட்டுத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ (24), சிவில் என்ஜினீயரிங் முடித்து விட்டு தொழில் செய்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே செல்லப்பிராணிகள் மீது அதிகளவில் ஆர்வம் இருந்துள்ளது. அந்த ஆர்வத்தால், வெளிநாட்டு வகைகளைச் சார்ந்த வளர்ப்பு சிலந்தி, கிளி, ஆடு, பல்லி, வாத்து, ஆமை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை மிகவும் பிரியமாக வளர்த்து வருகிறார்.
இதையும் படிங்க: மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த 4,900 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் - இருவர் கைது!
சிறு வயது முதலே பறவைகள், மீன்கள் மீது ஆர்வம் கொண்டு அவற்றை வளர்க்க ஆரம்பிக்கத் துவங்கிய மேத்யூ, தற்போது இண்டர்நெட் மூலம் என்னென்ன வெளிநாட்டுப் பறவைகளை நமது நாட்டில் வளர்க்க முடியும் என தேடிப் பார்த்து, அவைகளை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கி வந்து, அதற்காக ஒரு பெரும் பண்ணையையே உருவாக்கியுள்ளார்.
அதில் பல அரிய வகையான பறவைகள், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆமை குஞ்சுகள், ஆப்பிரிக்கன் கிளிகள், சீனாவைச் சேர்ந்த சிறிய ரக கோழிக் குஞ்சுகள், ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட உடும்பு, முள்ளம்பன்றி, பலவகையான மீன்கள், தைவான் நாட்டு ஆடு உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, டரான்டுலா என்ற பெரும் சிலந்தியை வளர்க்கும் போது ஏற்பட்ட ஆர்வத்தினால், தற்போது பிரேசில் நாட்டு வகையைச் சார்ந்த சாக்கோ கோல்டன், கர்லி ஹேர், சாலமன் கிங் பேர்டு ஈட்டர் உட்பட பல சிலந்திகள் மற்றும் எளிதில் கையாளக்கூடிய மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத சிலந்திகளையும் வளர்த்து வருகிறார் மேத்யூ.
இதுகுறித்து இளைஞர் மேத்யூ கூறுகையில், "காட்டுத் தோட்டம் பகுதியில் கடந்த 8 வருடமாக அரசிடம் முறையான உரிமம் பெற்று இந்த பண்ணையை நடத்தி வருகின்றோம். இங்கு 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயிரினங்கள் உள்ளது. முதலில் பிடிக்கும் என்பதற்காக விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தேன். அதுவே நாளடைவில் பண்ணையாக மாற்றலாம் என முடிவு செய்து நடத்தி வருகின்றோம்.
இந்த செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு வனத்துறையின் பரிவேஷ் என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் அனுமதி கிடைக்கும். அதன்பின், செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு எந்தவித பிரச்னையும் இருக்காது. தற்போது, அரிய வகை உயிரினங்களை வளர்ப்பதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகள் படி இவற்றை வளர்க்க முடியும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்