தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் 4 நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. அதில் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை வழங்குவதில், தொடர்ந்து 3வது முறையாகத் தமிழ்நாட்டில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இதனைப் பாராட்டும் விதமாக, தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் சீர்வரிசை எடுத்து வந்து பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவினை மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பழங்கள், இனிப்புகள், மலர்மாலைகள் கொண்ட சீர்வரிசைத் தட்டுக்களை மேளதாளம், தப்பாட்டம் முழங்க, சுகாதார மருத்துவத்துறை பணியாளர்கள் தஞ்சையின் முக்கிய வீதிகள் வழியாகக் கொண்டு சென்று கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தைச் சென்றடைந்தனர்.
இந்த விழாவில், டாக்டர் முத்துக்குமாருக்கு மலர் கிரீடம் சூட்டப்பட்டது. தொடர்ந்து 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவினருக்கு அவர்களது சேவையைப் பாராட்டும் விதமாக மாலை அணிவித்து, சான்றிதழ் வழங்கி மேயர் கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில், ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு வருகிறது.