சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் ஏறத்தாழ 15 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திமுக கட்சியின் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று(ஏப்.3) தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தி.நகர், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் , அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது தி.நகர்ப் பகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட போது திமுக நிர்வாகி ஒருவரின் குழந்தைக்கு அருகன் என பெயர் சூட்டினார். இந்த பெயர் புத்தரின் பெயர் எனவும் பெற்றோரிடம் கூறியதுடன், தமிழ்ப் பெயர் எனவும், இந்த பெயர் உங்களுக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளருக்குப் பணத்தினால் செய்யப்பட்ட பூங்கொத்தைப் பரிசாக வழங்கினர். பிரச்சாரத்திற்குச் சென்ற இடங்களில் வேட்பாளருக்கு மாலை அணிவித்தும், மலர் கீரிடம் சூட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, பகுதி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீவிர பிரச்சாரத்திற்கிடையே ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுகவுக்கு ஆதரவாகப் பெரிய அலை வீசுவதாகவும், களம் திமுகவிற்கு ஆரவாரமாகவும், எழுச்சியாகவும் உள்ளது.
தேர்தலுக்காகக் கச்சத்தீவைக் கையில் எடுத்த பாஜக: பாஜக மற்றும் பிரதமர் மோடி கச்சத்தீவைத் தேர்தலுக்காகக் கையில் எடுத்துள்ளனர். கடந்த 10 வருடமாக எதுவும் செய்யாமல் தற்போது தேர்தலுக்காக மேற்கொள்ளும் பல்வேறு யுக்திகளில் அதுவும் ஒன்றாக உள்ளது.