விழுப்புரம்: "தமிழக வெற்றிக் கழகம்" என்ற பெயரில் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்த நடிகர் விஜய், முழு நேர அரசியல்வாதியாக மாறி, மேடை ஏறி முழங்கியிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், இந்த மாநாட்டை கட்சியின் "வெற்றிக் கொள்கைத் திருவிழா" என பெயர் சூட்டியிருக்கிறார். இந்த பெயருக்கேற்ப தமது உரையில் தமது அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகின்றன யாரை எதிர்க்கப் போகிறோம் என்பதையும் விஜய் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க:தவெக மாநாடு: விஜய்யின் அதிரவைத்த ரேம்ப்வாக்!
பெரியார் உண்டு கடவுள் மறுப்பு இல்லை:தமது கட்சியின் கொள்கைகளுக்கு முன்னோடியாக யாரை முன்னிறுத்தப்போகிறோம் என்ற வரிசையில் முதல் பெயராக பெரியாரின் பெயரை குறிப்பிட்டார். "பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் தான் எங்களின் கொள்கைத் தலைவர்" என கூறிய விஜய் ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என கூறிய விஜய் , தங்களின் கட்சி யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை என கூறினார். திமுகவை நிறுவியவரான அண்ணாவின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற வார்த்தை தான் தங்களின் கொள்கை எனவும் விஜய் கூறினார். ஆனால் பெண்கள் முன்னேற்றம் , சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு போன்ற பெரியாரின் மற்ற கொள்கைகளை தாங்கள் ஏற்பதாகவும் விஜய் கூறினார்.
அடுத்ததாக மதச்சார்பின்மைக்கும், நேர்மைக்கும் உதாரணமாக திகழ்ந்த காமராஜர், நாட்டின் அரசியல் சாசனத்தை இயற்றிக்காட்டிய அம்பேத்கர் ஆகியோரையும் தங்களுக்கான கொள்கைத் தலைவர்களாக முன்னிறுத்துவோம் என விஜய் கூறுகிறார். அம்பேத்கரின் பெயரே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் சாதிய ஒடுக்குமுறைகளுககு எதிரான கொள்கைகள் தான் நினைவுக்கு வரும் எனவும் விஜய் குறிப்பிடுகிறார்.
"பெண்களை தலைவர்களாக ஏற்போம்!":பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்கும் முதல் கட்சி த.வெ.க. (TVK) தான் என குறிப்பிட்ட விஜய், சொந்த மண்ணுக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து வாளேந்திய வேலுநாச்சியார், சுதந்திரத்திற்காக போராடிய அஞ்சலை அம்மாள் ஆகியோரும் தங்களின் கொள்கைத் தலைவர்கள் என விஜய் குறிப்பிடுகிறார்.
ஊழலையும் எதிர்ப்போம்:சாதி மத அடிப்படையிலான பிளவுவாதம் மட்டுமல்ல ஊழல் மலிந்த அரசியல் கலாசாரமும் மக்கள் நலனுக்கு எதிரானது தான் என குறிப்பிடும் விஜய் , ஊழலை 100 சதவீதம் ஒழிக்க முடியுமா என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை என்கிறார். பிளவு வாத சக்தி என்பதை மதம் பிடித்த யானையுடன் ஒப்பிடும் விஜய் ஆனால், கரப்ஷன் என்பது கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும் என கூறுகிறார். முகமுடி போட்ட கரப்ஷன் கபடதாரிகள் தான் நம்மை ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள் என ஆட்சியாளர்களை அவர் மறைமுகமாக சாடினார். என்னுடைய ஒரு எதிரி பிளவுவாத சக்திகள் என்றால் மற்றொரு எதிரி கரப்ஷன் கபடதாரிகள் எனவும் விஜய் கூறினார்.
இதையும் படிங்க: "ஆளுநர் பதவி அகற்றப்படும்.. இருமொழிக் கொள்கை" - தவெக செயல்திட்டம் என்ன?
இலவச அரசியலை சுட்டிக்காட்டிய விஜய் "முடிஞ்சவங்க மீன்பிடிச்சு வாழட்டும், முடியாதவங்களுக்கு மீன் பிடிச்சு கொடுத்து வாழ வைப்போம்" என இலவச பொருட்கள் தொடர்பான தமது கொள்கையையும் விளக்கினார். மாற்று அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை தங்கள் கட்சி செய்யப் போவதில்லை என கூறிய விஜய், தங்கள் கட்சி எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக மக்களுக்கு இருக்காது என கூறினார்.
யாருக்கும் பி டீம் இல்லை:தன்னை யாருடைய அரசியல் ஏ டீம், பி டீம் என சாயம் பூச முடியாது என கூறிய விஜய், யாராவது நல்லது செய்ய மாட்டார்களா என ஏங்கும் மக்களுக்காகத்தான் தான் அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறினார். கரப்ஷன் கபடதாரிகளை ஜனநாயக தேர்தல் களத்தில் சந்திக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என கூறிய விஜய் 2026 சட்டமன்றத் தேர்தல் நாளில் மக்கள் தனக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
இங்கே சிலர் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது ஒரு நிறத்தை பூசிவிட்டு, இவர்கள் மட்டும் அண்டர் கிரவுண்ட் டீலிங் செய்வதாகச் சாடிய விஜய், மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சினு சொல்லி மக்களை எமாற்றுகிறீர்கள் என கடிந்து கொண்டார். TVK கட்சிக்கு நாங்கள் டிசைன் செய்திருக்கும் கலரைத் தவிர வேறு யாரும் எந்த கலரையும் கொடுக்க முடியாது என்றும் விஜய் குறிப்பிட்டார். கொள்கை, அடிப்படையில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என கூறிய விஜய், எந்த அடையாளத்திற்குள்ளும் சுருக்காமல் மதச்சார்பற்ற அரசியல் கொளகை என்பதை கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்படப்போகிறோம் என தெரிவித்தார்.
ஏழை மாணவர்களின் கல்விக்கு NEET போன்ற தகுதித் தேர்வுகள் தடையாக இருப்பதாக கூறிய விஜய் மருத்துவப் படிப்பு கிடைக்காததால் மரணமடைந்த மாணவி அனிதாவின் மரணம், தனது தங்கையின் மரணத்திற்கு இணையான வேதனையை ஏற்படுத்தியது என கூறியுள்ளார். நிறைவாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி சிம்பிள் மெஜாரிட்டியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்தாலும், கூட்டணிக்கு தாம் தயாராக இருப்பதாகவும், அப்படி வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் எனவும் கூறினார்.