கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு 153வது ஆண்டு தைப்பூச விழாவையொட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது. மேலும், 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.
இன்று (ஜன.24) காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. வள்ளலாருக்குச் சத்திய ஞான சபை கட்ட நிலத்தைத் தானமாக அளித்த பார்வதிபுரம் கிராம மக்கள் மேளதாளம் முழங்கச் சீர்வரிசை தட்டுடன் ஞான சபைக்கு வருகை தந்தனர்.
அதன் பின்னர், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் அமைந்துள்ள கொடி மரத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. அப்போது கிராம மக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன், “அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி” என்று முழக்கமிட்டனர்.
நாளை (ஜன.25) தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி சத்திய ஞான சபையில் காலை 6:00 மணி, 10:00 மணி, பகல் 1:00 மணி, இரவு 7:00 மணி, 10:00 மணி எனவும், அதேபோல் நாளை மறுநாள் (ஜன.26) காலை 6 மணி, என 6 காலம் 7 திறைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதே போல, வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையில் வருகிற ஜன.27 ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.
ஜோதி தரிசனத்தைக் காணத் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம் மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், வடலூா் தைப்பூச விழாவையொட்டி, குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், போக்குவரத்தை சீா் செய்யவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் 800 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். இதற்காக 10 கண்காணிப்பு கோபுரங்களும், 60 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது.
அன்னதானம் வழங்குபவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிமம் பெற்றே வழங்க வேண்டும். அன்னதானத்துக்குக் கொண்டுவரப்படும் உணவுப் பொருள்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனிடையே வடலூர் தைப்பூச திருவிழா ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் மது மற்றும் மாமிசக் கடைகளை நாளை (ஜன.25) முழுவதுமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவையில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 இறைச்சி கடைகள் இயங்க தடை - மாநகராட்சி அறிவிப்பு..!