தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"உயிர் போனாலும் பரவாயில்லை என ரயிலை நோக்கி ஓடினோம்" - பாலருவி ரயிலை காப்பாற்றிய தம்பதியின் நெகிழ வைக்கும் பேட்டி! - Tenkasi

Tenkasi Lorry Accident: தென்காசியில் இரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவ்வழியாக வந்து கொண்டிருந்த ரயிலை, வயது முதிர்ந்த தம்பதி டார்ச்லைட் அடித்து நிறுத்தியதால், பாலருவி ரயில் விபத்தில் இருந்து தப்பியது. இது குறித்து தம்பதி ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரேத்யேக பேட்டியை பார்க்கலாம்..

தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 3:11 PM IST

Updated : Feb 27, 2024, 3:55 PM IST

தென்காசி:கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் லோடு ஏற்றிச் சென்ற லாரி, தமிழக கேரள எல்லையான செங்கோட்டை பகுதியில் உள்ள எஸ் வளைவு அருகே வந்து கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது 50 ஆழத்தில், கேரளா - தென்காசி ரயில் தண்டவாளத்தில் விழுந்து, விபத்துக்குள்ளானது.

இதில் லாரி முழுவதும் முழுமையாக சேதம் அடைந்த நிலையில், லாரி ஓட்டுநரான முக்கூடல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி கிளீனர் விபத்தின் போது கீழே குதித்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் லாரி விழுந்த தண்டவாளத்தில், நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சண்முகையா (வயது 66) என்ற முதியவர் மற்றும் மூதாட்டி வடகித்தியா விழுந்து கிடக்கும் லாரி மீது ரயில் மோதினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதை உணர்ந்து, எப்படியாவது ரயிலை நிறுத்தி விட வேண்டும் என ஓடி சென்று, டார்ச்லைட் அடித்து சிக்னல் காண்பித்துள்ளனர்.

இதைப் பார்த்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால் நடைபெறவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லாரி விபத்து குறித்து இரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த இரயில்வே ஊழியர்கள் மற்றும் இரயில்வே போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி எந்திரத்தின் மூலம் தண்டவாளத்தில் கிடந்த லாரி அப்புறப்பட்டு, தண்டவாளம் சரி செய்யப்பட்டது.

இதன் பின் பாலருவி எக்ஸ்பிரஸ் இரயில் சுமார் 4 மணிநேரம் தாமதமாக சென்றது. இரயிலை நிறுத்தியது குறித்து மூதாட்டி வடகித்தியா பேசியதாவது, "மலையிலிருந்து சுமார் 12:54 மணியளவில் லாரி கீழே, தண்டவாளத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. அதே நேரம் இரயிலும் வந்தது. என்ன செய்வதென்று புரியாமல் உடனடியாக, டார்ச் லைட்டை அடித்தபடி 40 அடி தூரத்திலிருந்து ஓடி சென்று, இரயிலை நிறுத்துமாறும் எஞ்சின் டிரைவருக்கு சிக்னல் காட்டினேன்.

எஞ்சின் டிரைவர் உடனடியாக இரயிலை நிறுத்தி, அதிகாரிகளுக்கு சூழ்நிலையை எடுத்துரைத்தார். அதன் பின் அதிகாரிகள், இரயில்வே ஊழியர்கள் அனைவரும் வந்து, லாரியை அப்புறப்படுத்தினர். விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவரின் உடலை மீட்டு எடுத்துச் சென்றனர். தண்டவாளத்தில் அருகில் இருந்து கொண்டு, விபத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. நாங்கள் வாழ்ந்து முடிந்தவர்கள்.எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை. மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், உயிரை வெறுத்து தான், இரயிலை நோக்கி ஓடி, இரயிலை நிறுத்தினோம்” என்றார்.

இது குறித்து முதியவர் சண்முகையா, “புளியரை பகுதியில், இரயில்வே தண்டவாளத்தின் அருகே வசித்து வருகிறேன். நள்ளிரவில் லாரி ஒன்று 50 ஆழத்தில், தண்டவாளத்தின் மீது விழுந்து, தண்டவாளம் மூடி கிடந்தது. அந்த நேரம் தண்டவாளத்தின் மீது ரயில் வந்து கொண்டிருந்தது.எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக டார்ச் லைட் அடித்தவாறு இரயிலை நோக்கி ஓடி, இரயிலை நிறுத்தினோம்’ என்றார்.

இந்த நிலையில், சாமர்த்தியமாக டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்தி, பெரும் விபத்தை தவிர்த்த முதியவர் சண்முகையாவிற்கும், மூதாட்டி வடகித்தியாவிற்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கொலை வழக்கில் 59 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை - தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Feb 27, 2024, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details