தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரின் பேட்டி (Credits: ETV Bharat Tamilnadu) தென்காசி: கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததை தொடர்ந்து, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் கொட்டிய நிலையில், அதில் பொதுமக்கள் குளித்து மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், 17 வயது சிறுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், "அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது குறித்தான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அருவிகளிலும் காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட உள்ளனர்.
அதேபோல், அருவியின் மேல் பகுதியில் வெள்ளத்தைக் கண்காணிக்க வனத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், வெள்ளத்தை முன்கூட்டியே கணிப்பதற்கு Early Warning System குறித்த ஆய்வுகள் நடைபெற்று, அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழைய குற்றால அருவியில் வெள்ளத்தின் போது சுற்றுலாப் பயணிகளை அடித்துச் செல்லாதவாறு பாதுகாப்பு கம்பிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. பழைய குற்றால அருவியைப் பொறுத்தவரை, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை குளிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும். மேலும், விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்யும் வகையில் அனைத்து அருவிகளிலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழகத்தை மிரட்ட வரும் 'ரீமால்' - 14 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் புயல்.. வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன? - Remal Cyclone Alert