தென்காசி: நாடாளுமன்றத் தேர்தல் என்னும் ஜனநாயகத் திருவிழா துவங்கி களைகட்டி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். அனைத்து கட்சியின் தலைவர்களும், நட்சத்திரப் பேச்சாளர்களும் தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களைக் கொண்டு ஒவ்வொரு பகுதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பின் போது, மக்களைக் கவரும் வண்ணம் தங்களுக்குக் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வார்கள். அதாவது, தோசை சுடுவது, பூரி சுடுவது, வடை சுடுவது உள்ளிட்ட செயல்களைச் செய்து வாக்கு சேகரிப்பார்கள். அந்த வகையில், தென்காசி தொகுதி பாஜக வேட்பாளர் டீ கடையில் டீ குடித்துக் கொண்டே வாக்கு சேகரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை பகுதியில் தென்காசி தொகுதி பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன், தென்காசியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) புளியரை, செங்கோட்டை, மத்தளம்பாறை உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.