திமுக செய்த ஊழல்களை சொல்லியே பிரச்சாரம் செய்வேன் தென்காசி:என்னுடைய மக்கள் எனக்கு 100% வாக்களிப்பார்கள், தென்காசி மாவட்டத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தென்காசி தொகுதி பாஜக வேட்பாளரான ஜான் பாண்டியன் பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டியாக உள்ளது. அந்த வகையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாள் முதல் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், முதல் வேட்பு மனுவாக பாஜகவின் கூட்டணிக் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று (மார்.25) வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் 50க்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க, ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து பாஜக கொடி கட்டிய அவரது காரில் வந்த ஜான் பாண்டியன், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தென்காசி மாவட்டத்தில் 100% தாமரை மலர்ந்தே தீரும். தமிழ்நாடு முழுவதும் 40க்கு 40 பெற்று பாரதிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெறும். மேலும், தென்காசி மாவட்டத்தில் சிறந்த ஒரு மாவட்டமாக மாற்றி, இளைஞர்களுக்கு வேண்டிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கித் தருவேன்.
மேலும், மக்கள் அனைவரும் எனக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவேன். எனது பிரச்சாரம் துவங்கும் போது திமுக செய்த ஊழல்களைச் சொல்லியே பிரச்சாரம் செய்வேன்.
தென்காசி மாவட்டத்தில் மக்களின் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது. இங்கு இருக்கக்கூடிய என்னுடைய மக்கள் எனக்கு 100% வாக்களிப்பார்கள். கண்டிப்பாகத் தென்காசி மாவட்டத்தில் தாமரை மலர்ந்தே தீரும். தென்காசி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த மாவட்டமாக மாற்றுவேன். பாராளுமன்றத்தில் தென்காசி மக்களின் குரலாக இருப்பேன். இதற்கு முன்னால் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த மக்களையும் சந்திக்கவில்லை, ஆனால் நான் அனைத்து மக்களையும் சந்தித்து வேண்டிய உதவிகளைச் செய்வேன்”, என கூறினார்.
இதையும் படிங்க: தென் சென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயவர்தனன், தமிழச்சி மற்றும் தமிழிசை.. - South Chennai Candidates Nomination