சென்னை: விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் லோகநாயகி என்பவர் சமூக வலைத்தளத்தில் லைவ் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், வீட்டு உரிமையாளர், வழக்கறிஞர்கள் சிலரோடு வந்து தனது வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசியதாகவும், தனது 16 வயது மகளை தாக்கியதாகவும் குறிப்பிட்டு அழுதார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லோகநாயகி கணவரைப் பிரிந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்வார் திருநகரில் உள்ள பழனி என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளார். இந்த நிலையில், லோகநாயகிக்கும், பழனி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை பயன்படுத்திக் கொண்ட லோகநாயகி, வாடகைக்கு இருந்த வீட்டை மற்றொரு நபரிடம் ரூபாய் 6 லட்சத்திற்கு லீசுக்கு விட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனை அறிந்த பழனி, வீட்டை விட்டு வெளியேறக் கூறியுள்ளார். அப்போது லோகநாயகி, தான் வளர்த்த நாயை விட்டு பழனியை கடிக்கச் செய்துள்ளதும் தெரியவந்தது.