தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான கம்பகரேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, பஞ்சமூர்த்திகள் கொடி மரம் அருகே எழுந்தருள, நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட திருக்கொடி விசேஷ பூஜைகளுக்குப் பிறகு கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, 7ஆம் நாளான 21ஆம் தேதி வியாழனன்று இரவு திருக்கல்யாண உற்சவமும், 9ஆம் நாளான 23ஆம் தேதி சனிக்கிழமை தேரோட்டமும், பின்னர் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரர் ஏகதின உற்சவம், கோடி அர்ச்சனை சிறப்பு ஜப ஹோமம், மகா அபிஷேகம் இரவு வெள்ளி ரதத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
அதேபோல், மகாமகம் பெருவிழா தொடர்புடைய 12 சைவத் திருத்தலங்களில் ஒன்றான கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.