தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

Minister Anbil Mahesh Poyyamozhi: ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 9:43 PM IST

சென்னை: சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சம வேலைக்குச் சம ஊதியம் கேட்டு ஒரு வாரக் காலமாகத் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆசிரியர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

கடந்த ஒரு வாரக் காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடத் தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வுக் காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாகக் கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்திலிருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்குச் சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்நாடு முதலமைச்சரின் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50,000 ஆசிரியர்களின் இன்னல்களைத் தீர்க்கும் வகையில் நமது கழக அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், நமது கழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காகச் செயல்படும் அரசாக இருந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்றுக் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்றுக் கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்வியாண்டின் இறுதிநிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். கற்றல் – கற்பித்தல் மற்றும் தேர்வு பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகப் பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பான் இந்தியா படத்துக்காக இந்தி தயாரிப்பாளருடன் கை கோர்க்கும் ரஜினி!

ABOUT THE AUTHOR

...view details