தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பு; சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடம்பெறுமா? - OLD PENSION SCHEME

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடம்பெற செய்ய வேண்டும் என அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அருணன், செய்திக்குறிப்பு
அருணன், செய்திக்குறிப்பு (ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 3:46 PM IST

Updated : Dec 9, 2024, 12:13 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. அப்போது முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற போராட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் செவிக்கொடுத்து கேட்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கொடுமைப்படுத்தினார்.

அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போராட்டக்களத்திற்கே நேரடியாக வந்து தங்களை வறுத்திக் கொண்டு போராட வேண்டாம் நான் ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என அறிவித்தார். மேலும், கோரிக்கைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தார்.

இதையும் படிங்க:" மூணு மாசமா பென்சன் வரல".. மதுரை காமராஜர் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேதனை!

பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்தார். போராட்டக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலனை வழங்கினார். துறைரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அதே பணியிடத்தில் கொண்டு வந்து பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை (ETV Bharat TamilNadu)

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை ஆறு மாதம் கழித்து வழங்கினார். பின்னர் மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை வழங்குகிறதோ, அதே தேதியிட்டு வழங்குவேன் என அறிவித்து நிதிநிலை சீரானதும் உயர்த்தி வழங்கி வருகிறார்.

மேலும், மத்திய அரசு உத்தரவாத ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டதை கொண்டு வருவதற்கான அறிவிப்பும் ஈட்டிய விடுப்பு, ஒப்படைப்பு ஊதியம் மீண்டும் வழங்குதல், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற செய்ய வேண்டும்" என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Dec 9, 2024, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details