மயிலாடுதுறை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்(செப்.5) ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
கௌரவிக்கப்பட்ட தலைமை ஆசிரியரின் கணவர் (Credits - ETV Bharat Tamil Nadu) அந்தவகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் தேர்வாகினர். அவர்களுக்கு, கடந்த செப் 5 ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஆசிரியர் தினத்தன்று சென்னை வண்டலூர் கிரெசன்ட் கல்லூரியில் நடைபெற்றது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துக்கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
இதில், மயிலாடுதுறை ஆக்கூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலைக்கு ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கு வருகை புரிந்த தலைமை ஆசிரியருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார் கோவில் ஒன்றியம் ஆக்கூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் மணிமேகலை. இவர் இப்பள்ளியில் கடந்த 9 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளி கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 98 விழுக்காடு தேர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியை மணிமேகலைக்கு ஆசிரியர் தின விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் மணிமேகலையை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர். ஆக்கூர் கடை வீதியில் தலைமை ஆசிரியர் மணிமேகலை மற்றும் அவரது கணவர் குணசேகரன் ஆகியோரை சால்வை அணிவித்தும், சந்தன மாலை அணிவித்தும் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
இதில், வழியெங்கும் மாணவிகள் மேளம் இசைத்தும், நடனத்துடன் தங்கள் தலைமை ஆசிரியையை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளிக்கு வந்த தலைமையாசிரியருக்கு சக ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லையா? முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்!