மதுரை:மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். BBTC நிறுவனம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்காது. ஆகவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரவும், அரசுப் பணியை குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டேன் டீ (Tan Tea) நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "டேன் டீ தொடக்கத்தில் லாபம் ஈட்டினாலும், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இயங்கி வருகிறது. இத்தகைய சூழலில் மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.