சென்னை:பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின் நிறுத்தங்களின் போது, மின் தடைபடும் நேரம் குறித்து மின் நுகர்வோர்களுக்கு முன்னரே குறுந்தகவல் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதை அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) பிரதீப் யாதவ் தலைமையில், மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனைத்து மின் பகிர்மான தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் மின்சார தேவை அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த மே 2ஆம் தேதி தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தின் மின் தேவை 20,830 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
குறிப்பாக, சென்னை மாவட்டத்தின் உச்ச பட்ச மின் தேவை, இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து மே 31ஆம் தேதி 4,769 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த மின் தேவையினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வெளி மின்சந்தை, மின் பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் வாயிலாக எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டது.
மேலும், மாநிலத்தின் மின்சார தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.