சென்னை:தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 7 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். 40 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடைய திறன் பயிற்சி 90 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
4 ஆயிரம் தனிநபர் நிறுவனங்கள் மற்றும் 75 குழு நிறுவனங்களுக்கு இணை மானிய நிதி திட்டத்தின் மூலம், முறையான நிதி நிறுவனங்களிடமிருந்து 150 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும், இதில் 50 கோடி ரூபாய் இணை மானிய நிதியாக பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கு, அதாவது அங்கு இருக்கும் சுமார் மூன்று லட்சத்து 29 ஆயிரம் குழுக்களுக்கு 30 கோடி ரூபாய் செலவில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். மேலும், 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு 10 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும். 7 ஆயிரத்து 500 தொழில் முனைவோர்களுக்கு 5.62 கோடி ரூபாய் செலவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
மேலும், “வானவில் மையம்" என்றழைக்கப்படும் பாலின வள மையமானது, வட்டார அளவில் ஒரு மாவட்டத்திற்கு மூன்று மையங்கள் வீதம் 37 மாவட்டங்களில் 111 வானவில் மையங்கள் ஐந்து கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் வளர் இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சி, 200 வட்டாரத்தில் உள்ள 6 ஆயிரத்து 83 ஊராட்சிகளில் 4.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.
இதில் குறிப்பிட்டபடி அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும், சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கும், பெண்கள் தொடர்பான சமூகப் பிரச்னைகளிலிருந்து பாதுகாப்பு சார்ந்த சட்ட விழிப்புணர்வு பயிற்சி 3.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய போட்டிகள் மற்றும் திருவிழாக்கள் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும்.
மேலும், சுய உதவிக் குழு மகளிர் மற்றும் விவசாயிகளால் உயர் மகசூல் தரும் கரும்பு ரகங்களின் பரு நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்திட அலகுக்கு 2 லட்சம் ரூபாய் வீதமும், 50 அலகுகளுக்கு 1 கோடி ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்படும். மேலும் மாநிலம் முழுவதும், 50 மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் 50 இளைஞர் திறன் திருவிழாக்களும், 75 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் 8 இடங்களில் 50 இலட்சம் ரூபாய் செலவில் மதி கஃபே (Mathi Cafe) அமைக்கப்படும்.
4 ஆயிரத்து 250 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்திட, சமையல் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படும். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய 25 அடுக்குமாடி குடியிருப்புகளில் (Apartment Bazaars) 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காட்சிகள் நடத்தப்படும்.
இதையும் படிங்க:'திமுக வன்னியர்களுக்கு செய்த துரோகத்துக்கு இடஒதுக்கீடு தான் பரிகாரம்' - அன்புமணி ராமதாஸ்