சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (27.2.2024) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள், 315 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14,000-க்கும் மேற்பட்ட அலுவலர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், பொதுமக்களின் வருவாய்த்துறை சான்றிதழ் பெறும் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது உயர் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், வருவாய்த்துறையின் மூலம் அளிக்கப்படும் சான்றிதழ்கள் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
10 மாதங்களுக்கு முன்னதாக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, 3 அமைச்சர்களும் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகள் மீது, மேலும் தாமதமின்றி அரசாணை வெளியிட வேண்டும். 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.