தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய பட்ஜெட் 2024; ஆளுநர், தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து! - Union Budget 2024 - UNION BUDGET 2024

Union Budget 2024: 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, ராமதாஸ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 10:13 PM IST

Updated : Jul 23, 2024, 10:38 PM IST

சென்னை:2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகள் சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது என தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர். என்.ரவி: “முன்னோக்கு நிதிநிலை அறிக்கை, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளித்துள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை விரிவுபடுத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிக்கிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை வளர்க்க வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேற்றுவது நமது லட்சியம். அதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது” என்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. 2019 முதல் 2024 வரை திமுக எம்பிக்கள் தமிழகத்துக்கு திட்டங்களைப் பெற்றுத்தர எந்தவித நடவடிக்கையையும் மக்களவையில் எடுக்கவில்லை.

தற்போதைய அறிவிப்புகளால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த எந்த நன்மைகளும் இருக்காது. சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோதாவரி - காவிரி இணைப்பை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் விட்டது. புதிய வரி விதிப்பு முறை போதுமானதாக இல்லை. பல வாக்குறுதிகள் வரவு, செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்போன் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.

பல்வேறு மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும்” என என வலியுறுத்தினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அசாம், உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ள பாதிப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் புறந்தள்ளி இருக்கிறார்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, கரோனா தாக்கம், மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வரும் கோவை மாவட்ட தொழில் துறை வளர்ச்சிக்கு திட்டங்கள் எதுவும் இல்லாததும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை:அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை. இளைஞர்கள் மேம்பாட்டுக்காக, பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு முதல், ஒவ்வொரு துறையின் வளர்ச்சியையும் கவனமாகக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினருக்குமான மிகச் சிறந்த நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.

இளைஞர்களுக்கான இன்டெர்ன்ஷிப் திட்டத்திற்கான ஊக்கத்தொகை, முத்ரா திட்டத்திற்கான லோன் தொகை அதிகரிப்பு, மகளிர் முன்னேற்றத்திற்காக ரூ.3 லட்சம் கோடியிலான திட்டங்கள் உள்ளிட்டவை என்டிஏ கூட்டணியின் ஆட்சியின் உறுதிமொழியை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தொலைநோக்கு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"தமிழக பட்ஜெட்டின் நகல் தான் மத்திய பட்ஜெட்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்! - cm Stalin criticized Union Budget

Last Updated : Jul 23, 2024, 10:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details