சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை குறித்து 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவையாவன பின்வருமாறு:-
1). 2025ஆம் ஆண்டு முதல் ஜனவரி திங்கள் 25ஆம் நாளினை "தமிழ்மொழித் தியாகிகள் நாளாக" கடைபிடிக்கப்படும்.
கடந்த காலங்களில் பிறமொழித் திணிப்பால் தாய்மொழி தமிழுக்கு வந்த ஆபத்தை எதிர்த்து தங்கள் இன்னுயிரை ஈந்த மொழித்தீரர்களின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் வரும் 2025ஆம் ஆண்டு முதல் ஜனவரி திங்கள் 25ஆம் நாளினை "தமிழ்மொழித் தியாகிகள் நாளாக" கடைபிடித்து சென்னையில் உள்ள நினைவகங்களில் வீரவணக்கம் செலுத்தப்படும்.
2). 2025ஆம் ஆண்டு முதல் ஜூன் திங்கள் 3ஆம் நாளினை 'செம்மொழி நாள் விழா'வாகக் கொண்டாடப்படும்.
கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 12.10.2004 அன்று தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் தலைமையில் முதன்முறையாக 2010ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழின மக்களின் விழாவாகக் கோவையில் சிறப்பாக நடத்தப்பட்டது.
தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்று தந்த முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும்.
மேலும், செம்மொழியின் முத்தமிழறிஞரின் சிறப்பையும் தமிழ்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வாயிலாகவும் கல்லூரி மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககம் வாயிலாகவும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பெறும் விழாச் செலவினம் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கிட ரூபாய் 1 கோடியே 88 இலட்சத்து 57 ஆயிரம் வழங்கப்படும்.
3). தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்.
முனைவர் ஆறு. அழகப்பன், முனைவர் இராமலிங்கம் (எ) எழில் முதல்வன் மற்றும் நினைவில் வாழும் தமிழறிஞர்களான முனைவர் சோ.சத்தியசீலன், முனைவர் மா.ரா.அரசு பாவலர் ச பாலசுந்தரம், முனைவர் க.ப.அறவாணன், முனைவர் க.த. திருநாவுக்கரசு, முனைவர் இரா.குமரவேலன், கவிஞர் கா.வேழவேந்தன் ஆகியோரின் நூல்கள் ரூபாய் 91 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் நாட்டுடைமையாக்கப்படும்.
4). சிறந்த நூல்களை எழுதும் நூலாசிரியர், நூலைப் பதிப்பிக்கும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
சிறந்த நூல்களுக்கான பரிசுத் திட்டம் வாயிலாக, 33 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்கள் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 2011ஆம் ஆண்டு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. இது தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, நூலாசிரியருக்கு ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து ரூபாய் 50 ஆயிரமாகவும், பதிப்பகத்தாருக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாகவும் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
5). கவிஞர் முடியரசன் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் செலவில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.
பாவேந்தரால் எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன் என்று பாராட்டப்பட்டவரும் 'வளையா முடியரசர்', 'வணங்கா முடியரசர்' எனவும் போற்றப்பட்டவருமான வீறுகவியரசர் முடியரசன் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் செலவில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.
6). கருணாநிதியின் பெயரில் புதிய விருது வழங்கப்படும்(Award the Name of Karunanidhi).
தமிழினத் தலைவர் என்று தமிழ்நாடு மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் அன்பாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் புதிய விருது தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும். கருணாநிதி அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு விருதுத் தொகை ரூபாய் 10 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை, தகுதியுரை ஆகியவை வழங்கிட ரூபாய் 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
7). சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
சண்டிகர் வாழ் தமிழர்களின் இளந்தலைமுறையினர் தமிழ்மொழியின் சிறப்பினையும், கலைப் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழ் மொழிப் பயிற்சி, ஆடற்கலை, இசைக்கலை, தையற்கலை மற்றும் எழில் புனைவு உள்ளிட்ட நுண்கலைகளைப் பயிற்றுவிக்க ஏதுவாக சண்டிகர் தமிழ் மன்றக் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
8). டெல்லி தமிழ்ச் கலையரங்கத்தினைப் சங்கத்தின் புனரமைக்க ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் டெல்லித் தமிழ்ச் சங்கத்தில் 1997ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் கலையரங்கத்தில் டெல்லி வாழ் தமிழர்களின் வழித்தோன்றல்கள் பயனுறும் வண்ணம் தமிழ் மொழிப் பயிற்சி, நடனம் மற்றும் இசை வகுப்புகள் நடத்துதல், தமிழ் சார்ந்த கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமிழ்சார்ந்த நிகழ்வுகள் நடத்திட ஏதுவாக கலையரங்கத்தினைப் புனரமைத்திட டெல்லித் தமிழ்ச் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
இதையும் படிங்க: "சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும் மகளிருக்காக கூடுதல் விடுதிகள்" - அமைச்சர் கீதாஜீவன்! - Hostels for Working Woman