பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு? கூடுமா? குறையுமா? - cut off details - CUT OFF DETAILS
Cut off details: 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கல்வி ஆலாேசகர் அஸ்வின் கூறுவது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கல்வி ஆலாேசகர் அஸ்வின் புகைப்படம் (Credits - Etv bharat tamilnadu)
கல்வி ஆலாேசகர் அஸ்வின் (Credits - Etv bharat tamilnadu)
சென்னை: தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியாகின. இதில், மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம் விபரம்:
வ.எண்
பாடப்பிரிவுகள்
தேர்ச்சி விகிதம்
1.
இயற்பியல்
98.48%
2.
வேதியியல்
99.14%
3.
உயிரியியல்
99.35%
4.
கணிதம்
98.57%
5.
தாவரவியல்
98.86%
6.
விலங்கியல்
99.04%
7.
கணினி அறிவியல்
99.80%
8.
வணிகவியல்
97.77%
9.
கணக்குப் பதிவியல்
96.61%
அதேபோல், முக்கிய பாடங்களான இயற்பியலில் 633 மாணவர்களும், வேதியியலில் 471 மாணவர்களும், உயிரியலில் 652 மாணவர்களும், கணக்கு பாடத்தில் 2,587 மாணவர்களும் , கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 6,996 மாணவர்கள் என 100க்கு 100 மதிப்பெண்களை 26 ஆயிரத்து 352 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மதிப்பெண்களைப் பொறுத்து எந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் இளங்கலையில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் துவங்கியுள்ளது.
இந்த நிலையில் உயர்கல்வியில் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் 2024-25 ஆம் கல்வியாண்டில் எந்தெந்த படிப்புகளில் எவ்வளவு கட் ஆஃப் குறையும், எந்த படிப்புகளுக்கு கட் ஆஃப் அதிகரிக்கும் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறியதாவது, “ 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில், கடந்தாண்டைவிட இந்தாண்டு இயற்பியல் பாடத்தில் 179 , வேதியியலில் 3,438 மற்றும் உயிரியல் பாடத்தில் 842 என எண்ணிக்கை குறைந்துள்ளது.
கணக்கு பாடத்தில், கடந்தாண்டை விட நடப்பாண்டில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,987ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக ஆய்வு செய்யும் போது, கணக்கு பாடத்திற்கான கட் ஆப் 1, இயற்பியல் கட்ஆப் 0.5, வேதியியல் கட் ஆப் 0.5 என கணக்கிடப்படும்.
மேலும், பொறியியல் படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண்கள் கடந்தாண்டு இருந்து போல் தான் இருக்கும். 195 கட் ஆப் மதிப்பெண்களுக்கு மேல் மட்டும் 1 கட்ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், 195 கட்ஆப் மதிப்பெண்கள் அப்படியே இருப்பதற்குத் தான் வாய்ப்பு உள்ளது. சில கல்லூரிகளில் இடங்கள் அதிகரித்தாலும் கட்ஆப் மாற்றம் இருக்காது என்பதைத் தான் கணக்கு பாடத்திற்கான கட்ஆப் மதிப்பெண் காண்பிக்கிறது.
கால்நடை மருத்துவ அறிவியல், மீன்வள அறிவியல் படிப்பைப் பொறுத்தவரையில், கடந்தாண்டை விட இந்தாண்டு கட்ஆப் மதிப்பெண்கள் குறையப்போகிறது. வேதியியல் உயிரியல் 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், கட்ஆப் மதிப்பெண்கள் 2.5 முதல் 4 கட்ஆப் மதிப்பெண் வரையில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வேளாண்மைப் படிப்புகளில் சேர்வதற்கு 2 வகையாக கட்ஆப் மதிப்பெண் கணக்கிடுவார்கள். இயற்பியல், வேதியியல், கணக்கு, உயிரியல் பாடப்பிரிவு அல்லது இயற்பியல், வேதியியல், கணக்கு மற்றும் 4வது பாடம் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். 4 வது பாடமாக கம்ப்யூட்டர் அறிவியல் எடுத்துப் படித்தவர்களுக்கு வேளாண்மைக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு நன்றாக இருக்கிறது.
இயற்பியல், வேதியியல், கணக்கு, கம்ப்யூட்டர் அறிவியல் எடுத்துப் படித்த மாணவர்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, மீன்வள அறிவியல் போன்ற வேளாண்மை பல்கலைக் கழகத்திற்குக் கீழ் உள்ள கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு நன்றாக இருக்கிறது. சென்ற ஆண்டை விட நடப்பாண்டில் கட்ஆப் 1 முதல் 2 வரையில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது” என தெரிவித்தார்.