கடலூர்:ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை அதிகம் கொண்ட கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், திட்டக்குடி (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. விவசாயம் மற்றும் மீன் பிடி தொழிலே இத்தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதராமக இருக்கிறது.
இதுவரை சந்தித்த தேர்தல்கள்: இதுவரை 17 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ள கடலூர் தொகுதியில் அதிக முறை வென்ற கட்சி என்ற பெருமையை காங்கிரஸ் பெற்றுள்ளது. அதாவது இங்கு 7 முறை காங்கிரஸ் கட்சியும், அடுத்தபடியாக திமுக 5 முறையும், அதிமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி ரமேஷ் 5,22,160 வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக போட்டியிட்ட கோவிந்தசாமி 3,78,177 வாக்குகளும் பெற்றனர். 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.
வாக்குப்பதிவு எவ்வளவு?:கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 746 வாக்காளர்கள் உள்ள நிலையில், இம்முறை 2024 தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரத்து 298 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 72.57 சதவீதமாகும்.
இம்முறை களம் கண்டவர்கள்: கடந்த முறை கடலூரில் திமுக களம் இறங்கிய நிலையில், இம்முறை இந்தியா கூட்டணி சார்பில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரணி தொகுதி எம்.பியாகவும், செய்யாறு தொகுதி எம்எல்ஏவாகவும் பதவி வகித்த விஷ்ணு பிரசாத் வேட்பாளராக உள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து போட்டியிட்டுள்ளார். இவர் 2011 இல் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்பொழுது மீண்டும் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
திரை பிரபலம் தங்கர்பச்சான்:நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட தங்கர் பச்சான் சினிமா துறையில் இருந்து அரசியலில் தடம் பதித்துள்ளார். பாமகவில் இணைந்த இவர் பாஜக கூட்டணியில் போட்டியிட்டுள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாணிக்கம் போட்டியிட்டுள்ளார்.
அதிக கோரிக்கைகளை கண்ட கடலூர்:கடலூர் துறைமுகத்தில் சரக்கு இறங்கும் தளம், வணிக முக்கியத்துவம் பெற்ற பண்ருட்டியில் பலாப்பழம், முந்திரி சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது முதல் கொள்ளிடம் வெள்ளாறு பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்படும் பகுதிகளில் கரைகளை உயர்த்திட வேண்டும் என்பது வரை பல கோரிக்கையுடன் கடலூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் தேர்தலை சந்தித்துள்ளனர்.
வெற்றி வாகை சூடப்போவது யார்?:கூட்டணி பலத்தை பொறுத்துதான் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி தோல்வி பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதே கடந்தகால தேர்தலில் இருந்து தெரிய வருகிறது. இதன்படி, பலம் வாய்ந்ததாக கருதப்படும் திமுக கூட்டணி இங்கு வெற்றி பெறுமா? தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பின் நடைபெறுள்ள இத்தேர்தல் அக்கட்சியின் வேட்பாளருக்கு சாதகமாக அமையுமா?, பாமக -பாஜகவுடன் இணைந்ததால் வாக்குகள் பிரிந்துவிட்டதாக கூறப்படுவது நிசர்சனமா? இந்த கேள்விகளுக்கான விடை வாக்கு எண்ணிக்கை நாளான ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: மத்திய சென்னையை தக்கவைக்குமா திமுக? வெற்றி யார் பக்கம்? - LOK SABHA ELECTION RESULT 2024