தருமபுரி: தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ராமதாஸ்-க்கு மோடி கேரண்டி கொடுத்தாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏன் செய்யவில்லை என்று ராமதாஸ் கேட்டாரா? இப்போதாவது இந்தக் கோரிக்கையை பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி இப்போது கேரண்டி கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா?
மோடி கேரண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? ராமதாஸ் மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தை பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பா.ஜ.க.
இன்று இந்திய அளவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவும், இடஒதுக்கீடு விழுக்காட்டை அதிகரிக்கும் வாக்குறுதி அளித்திருக்கும் ஒரே தேசிய கட்சி காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அதை வாக்குறுதியாக தந்திருக்கிறார்.