சென்னை:சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையிலிருந்து நீதி கேட்கும் பேரணி நாளை (ஜன.3) ஆரம்பித்து ஏழு இடங்களில் அவர்கள் தங்களுக்கான இடைவெளி எடுத்து எட்டாவது இடமாக சென்னைக்கு வந்து சேர்வார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் என்பது இதுவரை தமிழகத்தில் செயல்படாமல் இருக்கிறது. முக்கிய அமைப்பு செயல்படாமல் இருக்கிறது முதலமைச்சருக்கு தெரியவில்லையா?
குற்றங்கள் அதிகமாக காட்டப்படக்கூடாது என்பதற்காக காவல்துறை எஃப்.ஐசஆர் ஐ பதிவிடாமல் மறைக்கிறார்கள். தொடர்ந்து எல்லா இடங்களிலும் காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கபடாத சூழல் காணப்படுகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இவை அனைத்தையும் கண்டித்து தான் மதுரையிலிருந்து பேரணியாக எங்களின் மகளிர் அணியினர் நாளை புறப்பட உள்ளனர்." என்று அண்ணாமலை தெரிவித்தார்.
பஞ்சப்பாட்டு:மேலும் அவர் கூறும்போது, "ஆட்சிக்கு வந்த பிறகு பஞ்சப்பாட்டு பாடுவது திமுகவின் கொள்கையாக இருக்கிறது. 44,662 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியாக வழங்கியுள்ளது. ஆனால் பள்ளிகளை மேம்படுத்துவது கிடையாது; கட்டுவது கிடையாது. அனைத்து அரசு பள்ளிகளும் சீரழிந்து கிடக்கின்றன.
அமைச்சர் அன்பில் மகேஷ் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளி மக்களிடம் காசை வாங்கிக் கொண்டு csr பணத்தை அளிப்பதற்கு பதிலாக தனியார் பள்ளியில் படிக்கும் நடுத்தர மக்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும். அரசுப் பள்ளியில் இருக்கக்கூடிய ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்வதை விட்டுவிட்டு எதற்கு தனியாரிடம் உதவி கேட்க வேண்டும்.புதிய கல்விக் கொள்கை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும்போது தமிழகம் மட்டும் தனித்து இருப்பது நல்லதல்ல. மும்மொழிக் கொள்கை பிரச்சனை என்றால் மீதி உள்ளதை ஏற்றுக் கொள்வதில் தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சனை? ஒப்புக்கு சப்பாக ஒரு காரணத்தை அமைச்சர் கூறுகிறார்," என்று அண்ணாமலை கூறினார்.
பொங்கல் பரிசுத் தொகை:அத்துடன், "பொங்கல் பரிசுத்தொகை என்பது ஆண்டாண்டு காலமாக மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. அனைத்து ஆண்டும் இதனை கொடுத்து வருவது இயல்பு. கடந்தாண்டு இதை கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள். அனைவரும் சண்டை போட்டபின் அதை தருவதாக கூறினார்கள். மக்களுக்கும் விவசாயிகளுக்கும் செலவு இருக்கும். ஆகவே திமுக அரசு பொங்கல் பரிசுத் தொகையை அளிக்க வேண்டும்.
2026 இல்: வைகோ அவர்கள் இலங்கை பிரச்சனையில் திமுகவை திட்டியதைப்போல் யாரும் திட்டியிருக்கமாட்டார்கள்.வைகோ கண் முன்னாலேயே 2026 இல் நாங்கள் திமுகவை தமிழகத்திலிருந்து நீக்கி காண்பிப்போம்.
நான் சாட்டையில் அடித்துக் கொண்டது புரிபவர்களுக்கு புரியும். அரசியல் கட்சித் தலைவர்கள் இதை நகைச்சுவையாக பேசினாலும் இது மக்களை சென்றடையும்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விஷயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்க முடியவில்லை. குற்றச்சாட்டப்பட்டவர் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார் என்பது ஆதாரத்துடன் இருக்கிறது.
விஜய் அவர்கள் ஆளுநரை சந்தித்ததை வரவேற்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்கள் அறிக்கை வெளியிட்டதை வரவேற்கிறேன்." என்று அண்ணாமலை கூறினார்.