சென்னை:வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட ஆம்னி பேருந்துகளை நாளை முதல் இயக்குவதற்கு தடை விதித்திருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் உள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர் விடுமுறையின் காரணமாக, வெளியூர் செல்வதற்கு பதிவு செய்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலைமை உருவாகி இருந்தது. மத்திய அரசு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலாப் பயணிகளுக்காக ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக அனுமதி வழங்குகிறது.
அந்த வகையில், பல்வேறு வெளி மாநிலங்களில் பதிவு எண்கள் கொண்ட 647 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வந்தன. அதனை மாற்றி, தமிழ்நாடு மாநில பதிவு எண் பெற வேண்டும் என சாலை பாேக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், 105 பேருந்துகள் தங்களின் பதிவு எண்ணை தமிழ்நாட்டிற்கு மாற்றியது.
மேலும், 547 ஆம்னி பேருந்துகள் தங்களின் பதிவு எண்களை தமிழ்நாட்டிற்கு மாற்றாமலும், சுற்றுலா நோக்கத்தில் இயக்காமல், முழுக்க முழுக்க பயணிகள் போக்குவரத்திற்காக அந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
உடனடியாக, இதுபோன்ற செயலை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியும், தொடர்ந்து அவர்கள் போக்குவரத்துக்காக சுற்றுலா ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு கொடுத்த கால அவகாசம் ஜூன் 14ஆம் தேதி இரவு 12 மணியுடன் முடிவடைய உள்ளது என அறிவிப்பு வெளியானது.