திருநெல்வேலி:நெல்லை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது, “ஆளும் கட்சியின் துணையோடு கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த நிலையிலும், முதலமைச்சர் நேரில் சென்று மக்களை பார்க்கவில்லை. எதற்கெடுத்தாலும் இளவரசரை, மகன் உதயநிதியை அனுப்பி வைத்து நலம் விசாரிக்கிறார். இது குடும்ப விழா அல்ல. 40 நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்த பயனும் இல்லை.
திருநெல்வேலி மேயர் மீது அவர்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லை என கூறுகிறார்கள். இருப்பினும், தொடர்ந்து அவர் மேயராக செயல்பட்டு வருகிறார். மாநகராட்சி பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. மக்களின் திட்டங்கள் முறையாக செய்யவில்லை. திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டுமானப்பணி மெதுவாக நடைபெறுகிறது. பக்தர்கள் பெருமளவு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடற்கரை பகுதியில் குளிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
ஓட்டு ஒன்றே குறிக்கோள்:நெல்லை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வரை அதற்கான நியாயம் கிடைக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் திமுகவினரை எதிர்த்து பேச பயப்படுகிறார்கள். சிபிசிஐடி விசாரணை எந்த பயனும் தராது. நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக, காங்கிரஸ்-க்கு ஓட்டு ஒன்றே குறிக்கோளாக உள்ளது.
மாஞ்சோலை விவகாரம்:மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, பணியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகமே, மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நடத்தினால் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை எப்படி காக்கும் என்பதை தமிழக அரசு உறுதி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கட்சி சார்ந்து பேசுகிறார். மக்கள் சார்ந்து அவர் எதுவும் பேசவில்லை. மதுவிலக்கு தொடர்பாக குரல் கொடுத்து வந்த கனிமொழி தற்போது பத்திரிகையாளர்களைச் சந்திக்க தயங்குகிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு துக்க தொகையாக வழங்கப்படுவதை, ஊக்கத்தொகையாக அரசு வழங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் பேச உரிய நேரம் கொடுக்கப்படவில்லை.
மூன்று குற்றவியல் சட்டங்கள்: மூன்று குற்றவியல் சட்டங்கள் இந்தியத்துவமாக மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் மீதான கொடுமைக்கு ஏழு நாட்களில் தண்டனை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை:எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தமிழகத்தில் சர்வாதிகாரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம், புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம், மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்ற ஒரே காரணத்திற்காக புதிய கல்விக் கொள்கை எதிர்க்கப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் கயிறுகளை கட்டி இருப்பதால் மட்டுமே சாதி பிரச்னைகள் உருவாகவில்லை. சாதி பிரச்னையின் அடிப்படை என்ன என்பதை அணுகி அதற்கான தீர்வை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"மடியில் கனமில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்க வேண்டியது தானே"- தமிழிசை சௌந்தர்ராஜன்!