தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரை நம்பி பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட மறுத்துள்ளது.
இதனால் மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசை காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் கும்பகோணம் ரயில் நிலையத்தில் அனைத்திந்திய விவசாய சங்கத்தினர் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதன்படி, திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலை மறிக்க முழக்கம் எழுப்பிய படி ஊர்வலமாக திரண்டு ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
இதனைப் பார்த்த போலீசார், போராட்டக்காரர்களை நுழைவு வாயிலிலேயே பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பேரிகார்டை தள்ளியும் அதன் மீது ஏறியும் உள்ளே நுழைய முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் லாவகமாக சுற்றி வளைத்து உள்ளே வராதபடி தடுத்து நிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் ரயில் நிலையத்திற்குள் யாரும் அறியா வண்ணம் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்த ரயிலுக்கு முன்புறமும், ரயில் நிலையத்தை நோக்கியும் வந்துகொண்டிருந்த சோழன் ரயிலையும் மறிக்க முயன்ற போராட்டக்காரர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் ரயில் நிலையத்திலும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் வாஸ்கோடகாமாவிலிருந்து தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணி செல்லும் வாஸ்கோடகாமா விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் ரயில் காலதாமதமாக புறப்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ரயில் நிலையத்திலும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:நீலகிரியில் ஒரே நேரத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை, கரடியால் பரபரப்பு! - LEOPARD AND BEAR in Coonoor