சென்னை:தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டதால், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார். தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்றங்களை அரசியல் இயக்கமாக மாற்றினார். மாநிலம் முழுவதும் ஆன்லைன் மூலம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட உள்ளார்.
முன்னதாக, தனது கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்தாண்டு நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். கிட்டத்தட்ட 13 மணிநேரம் மேடையில் நின்று அனைவருக்கும் பரிசு வழங்கியது பேசுபொருளானது.
இந்த நிலையில், இந்தாண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலம் முழுவதும், தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் பரிசுப் பொருட்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார். முதற்கட்டமாக இந்த நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்வில், முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி. தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார்.
காலை 9 மணிக்கு தொடங்கும் விழாவில், நடிகர் விஜய் பத்து நிமிடங்கள் பேசுகிறார். அதன்பிறகு வழக்கமான நிகழ்ச்சி நடைபெறும். கடந்த முறை நடிகராக பரிசுகள் வழங்கியவர், இம்முறை கட்சித் தலைவராக பரிசுகள் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று மாணவர்களை விருந்து உபசரிப்பு, ராஜமரியாதைடன் தவெக நிர்வாகிகள் பேருந்து மூலமாக சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 30 மாணவர்கள் மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னத்துரை என 31 பேரை திருநெல்வேலி மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இன்று சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ரோஜா பூ கொடுத்தும், சந்தனம், குங்குமம் வழங்கியும் விருந்து உபசரிப்போடு அவர்களை வரவேற்றனர். மேலும், பயணத்தின் போது பொழுது போக்குவதற்காக தலைவர்களின் புத்தகங்களையும் பரிசாக கொடுத்தனர்.
இதையும் படிங்க:மீண்டும் ஜாலி கேரக்டரில் அஜித்.. குட் பேட் அக்லி செகண்ட் லுக் வெளியானது! - Good bad ugly Second look