விழுப்புரம்:நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு இருக்கும் எனவும் தங்கள் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் முறையாக முதல் அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், முதல் அரசியல் மாநாட்டை மதுரை, திருச்சி, ஈரோடு அல்லது சேலம் ஆகிய மாநகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அங்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கு கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரி மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், மேலும், மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக சுமார் 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாகவும், ஐந்து ஏக்கர் நிலமானது இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து மாநாடுக்காக குறிப்பிட்ட இடத்தில் காவல்துறை அதிகாரிகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்திருந்த நிலையில், அனுமதி வழங்குவதில் இழுபறி நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியாளரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், மாநாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து விழுப்புரம் எஸ்பி தான் முடிவெடுப்பார் என்றும் மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடு, போக்குவரத்து மாற்றம் மற்றும் ஒழுங்குமுறை குறித்து எஸ்பி ஆய்வு செய்து முடிவு எடுத்து அறிவிப்பார் என்று ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கடந்த பத்து நாட்களாக விடுமுறையில் இருந்ததால் விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும், மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ள அந்த மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாகவும், விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தகவல் தெரிவித்தார்.
மேலும், விடுமுறை முடிந்து இன்று மாலைக்குள் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பணிக்கு திரும்பிய பிறகே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.