தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை: விஜயின் த.வெ.க அறிவிப்பு - VIKRAVANDI BY ELECTION - VIKRAVANDI BY ELECTION

Tamilaga Vettri Kazhagam: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்(கோப்புப்படம்)
நடிகர் விஜய்(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 11:01 AM IST

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் எனவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். அதிமுக, தேமுதிக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கழகத் தலைவர் விஜய் விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், மற்றும் செயல்திட்டங்களை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக கழகத் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கூடுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வை திரும்ப பெறும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details