சென்னை:குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் இந்தியர்கள் பங்குதாரர்களாக உள்ள என்பிடிசி குழுமத்துக்குச் சொந்தமான குடியிருப்புக் கட்டடம் ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் இந்தியர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 12) காலை சுமார் 4 மணிக்கு மேல் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தின் தரைதளத்தில் தீ பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அந்த தீ மளமளவெனப் பரவி தீ விபத்தாக மாறியுள்ளது. அது காலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கட்டடம் முழுவதும் தீயின் புகைப் பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் அனைவருக்கும் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கட்டடத்தில் குடியிருந்தவர்கள் தப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால், வெளியே வர முடியாமல் பலரும் தீ விபத்தில் பலியாகினர். அதாவது, 45 இந்தியர்கள் உட்பட 49 பேர் தீ விபத்தில் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்களில் 7 பேர் தமிழர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்ற இந்திய தூதரக அதிகாரிகள் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களை விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறது.