சென்னை:தமிழ்நாட்டில் கோடை மழை குறைந்து வரும் நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஓரிரு இடங்களில் லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை செல்சியஸ் உயரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இன்று (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை:சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்ப அலை:தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் வரும் வியாழக்கிழமை வரை வெப்ப அலை வீசும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 108 டிகிரி வெப்பம் நிலை பதிவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நினைத்த அளவு மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா வானிலை:இந்தியாவில் முக்கிய பருவமழை மண்டலமாக குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மத்திய பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் விவசாயிகளால் மானாவாரி விவசாயம் முதன்மையாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் இந்தியாவில் இந்த ஆண்டு மானாவரி விவசாயப் பகுதிகளை பெரிதும் உள்ளடக்கி இருக்கும் முக்கிய பருவமழை மண்டலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஜூன் மாதம் வழக்கமான மழை பொழிவு இருக்க வாய்ப்புள்ளது என்றும், அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை இந்திய தீபகற்பத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையையும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தென்காசி மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு!