சென்னை:இது தொடர்பாகதமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் பிரிவு 88(9) ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (AITP) வழங்க அதிகாரம் அளிக்கிறது.
இந்த அனுமதிச் சீட்டு குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக மட்டுமே (அதாவது சுற்றுலாப் பயணிகள் யாத்திரை, திருமணம், சுற்றுலா பார்வையிடுதல் போன்ற காரணங்களுக்காக) வழங்கப்படுகிறது. ஆனால், மேற்கூறிய காரணங்களுக்கு அல்லாமல், இந்த சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களும் விதிகளை மீறி இயக்கப்படுவதாக பெறப்பட்ட சமீபத்திய புகார்களின் அடிப்படையில், காரணங்களை ஆராய்ந்ததில், அனுமதி பெற்ற வாகனங்கள் பெரும்பாலும் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டு செயல்படாமல் வேறு வகையில், செயல்படுகின்றன என்று தெரிய வருகிறது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒப்பந்தத்தின் படி சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாமல் பல இடங்களில் பயணிகளை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றி, இறக்கி அல்லது தமிழ்நாட்டிற்குள் ஏற்றி, இறக்கி பயணிகள் பேருந்துகள் போல் இயக்கப்படுகிறது.
பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ், இ-டிக்கெட் மற்றும் ரெட் பஸ், அபி பஸ் போன்ற பல்வேறு பஸ் டிக்கெட் முன்பதிவு செயலிகள் மூலம் மின்னணு முறையில் டிக்கெட்டுகளை வழங்குவதன் மூலம் தனிநபர்களிடமிருந்து தனித்தனியாக (சுற்றுப்பயண குழு அமைப்பாளரிடமிருந்து அல்ல) கட்டணத்தை வசூலித்தல். ஒரு மாநிலத்திலிருந்து பயணிகளை ஏற்றி சுற்றுலா வாகனம் போல் இயக்காமல் வெவ்வேறு மாநிலத்தில் பல இடங்களில் இறக்கி விடுதல்.
அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் (அனுமதி) விதிகள் 2023க்கு எதிராக, சுற்றுலாத் திட்டம், ஒப்பந்தத்தின் படியும், பயணிகள் பட்டியலை மின்னணு அல்லது காகித வடிவில் பராமரிக்காமலும் இயக்குதல். ஒப்பந்தத்தின் படி அவர்களின் திட்டமிட்ட பாதை மற்றும் தேதியைப் பின்பற்றாமல் இருப்பது, அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (AITP) நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துதல்.
பிற மாநிலங்களில் அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டுகளைப் (AITP) பெறுவதில் முறையற்ற நடைமுறைகளை பின்பற்றுவது போன்றவை தெரியவந்துள்ளது. எனவே, அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (AITP) வாகனங்களின் இயக்கத்தினை நெறிப்படுத்தும் நோக்கத்தில் ஜூன்.13 முதல் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு அரசு இதன் மூலம் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள், சுற்றுலா ஏற்பாட்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (AITP) இன் கீழ் இயங்கும் சுற்றுலா வாகனம் எப்பொழுதும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும். அதில் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டும்.
குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கான பயண விவரங்கள் மற்றும் இந்தப் பதிவுகள் அதிகார வரம்பிற்குட்பட்ட போக்குவரத்து அதிகாரம், வேறு ஏதேனும் சட்ட அமலாக்க அதிகாரிக்கு தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும்.