சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவராக இருந்தவர் த.வெள்ளையன் (76). இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வணிகர் சங்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்தார்.
இந்நிலையில் இவருர்ரு திடீரென்று நுரையீரல் தொற்று ஏற்படவே சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக மருத்துவமனையில் இருந்து பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் பெரம்பூர் வியாபாரிகள் நல சங்க தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.