சென்னை:இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும், தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008ன் படி மொத்த விலைக்குறியீட்டின் அடிப்படையில் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றியமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியது.
இந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்திற்கான சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றும், சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, ஓமலூர் உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளின் பயனர் கட்டணம் உயர்த்தப்படும் காரணத்தால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் சரக்குக் கட்டணம் உயரும் என்று கோயம்பேடு வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.