தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், பழமை வாய்ந்த கற்சிலைகள் கரை ஒதுங்குகின்றன. அந்த வகையில் தற்போது சிங்க உடல் பதித்த கற்சிலை மற்றும் லிங்க வடிவலான கற்சிலைகள் கரை ஒதுங்கியுள்ளது. இதனை பக்தர்கள் வியப்பாக பார்த்துச் செல்கின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் முருகன் கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக, திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கமாகும். இவ்வாறு கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோயிலுக்கு முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாக கோயில் முன் கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் சுமார் 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கோயில் முன்புள்ள படிக்கட்டு வழியாக கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பாக, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரை ஒதுங்கிய கற்சிலை:
இந்த நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில், பல ஆண்டுகள் பழமையான கல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதன் உடல் பார்ப்பதற்கு சிங்கத்தின் உடல் போன்றும், முகம் வேறு ஒரு உருவத்தின் வடிவிலும் அமைந்துள்ளது. அதேபோல், இந்த கல் அருகே மற்றொரு கற்சிலையும் கரை ஒதுங்கியுள்ளது. அதனை பார்ப்பதற்கு பாதம் போன்று இருந்துள்ளது. ஆனால், அதனை கவிழ்த்து பார்த்தபோழுது சிவலிங்கம் போன்று காட்சியளித்துள்ளது. இதனை கடற்கரையில் நீராடிய பக்தர்கள் வியப்பாக பார்த்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: குமரி திருவள்ளுவர் சிலை பகுதியை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்க வேண்டும்.. ஐடி பணியாளர் கோரிக்கை!
யாளி:
சிங்கத்தின் உடல் போன்றும், முகம் வேறு ஒரு உருவத்தின் வடிவிலும் அமைந்துள்ள சிலைகள் மிகவும் பழமையான கோயில்களில் இருக்கும். சிங்க உடலும் அதில் யாளியின் முகமும் பொறிக்கப்பட்டிருக்கும். யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இவை பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணப்படும். இது சிங்கம் மற்றும் யானையை விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.
முற்காலத்தில் ஏதோ கோயில்களில் இந்த கல் சிற்பம் முகப்புகளில் இருந்துள்ளது. திருச்செந்தூர் கோயில் சீரமைப்பு பணியின் போது இந்த கல் அகற்றப்பட்டு கடற்கரை பகுதியில் மூழ்கியிருக்கும். தற்போது கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், கீழே புதைந்து கிடந்த இந்த கல் வெளியில் தெரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், தொடர்ந்து ஏராளமான கற்சிலைகள் வெளியே தெரிகிறது. இதை பக்தர்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில், இவ்வாறு கடற்கரைகளில் ஒதுங்கும் பழங்கால சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.