தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை மக்களுக்கு 'அல்வா' செய்தி.. அமைகிறது தேசிய பேரிடர் மீட்பு மையம்.. பின்னணி என்ன? - nellai National Disaster Center - NELLAI NATIONAL DISASTER CENTER

NDRF Centre in Tirunelveli: தமிழகத்தின் இரண்டாவது தேசிய பேரிடர் மீட்பு மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன்
நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 7:04 PM IST

திருநெல்வேலி: இந்தியாவில் பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 18 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, தமிழகத்தில் அரக்கோணத்தில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தென் மாநிலங்களின் பேரிடர் நேரங்களில் இந்த குழுவினர் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் பேரிடர் ஏற்பட்டாலும், அரக்கோணத்தில் இருந்து தான் தேசிய பேரிடர் மீட்பு படையினர், கமாண்டர் தலைமையில் சம்பவ இடத்துக்குச் செல்வார்கள். அதேநேரம், அரக்கோணம், தமிழகத்தின் வடக்கு பகுதியில் உள்ளதால் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் பேரிடர் ஏற்படும் போது மீட்புக் குழுவின் வருகைக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, கட்டடம் இடிந்து விழுவது, திடீர் வெள்ளம், கல்குவாரி விபத்து போன்ற பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான நவீன கருவிகள் தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடம் தான் அதிகம் இருக்கிறது. எனவே, தமிழகத்தில் அரக்கோணத்தை தவிர, தென் மாவட்டங்களில் ஒரு தேசிய பேரிடர் மீட்பு மையம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தது. இதுபோன்ற சூழலில் தான் கடந்தாண்டு டிசம்பரில், திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியது.

வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் இதை விட அதிக வெள்ளம் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, அந்த நேரங்களில் மீட்புப் பணியை துரிதப்படுத்தும் விதமாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 2வது மையத்தை திருநெல்வேலி மாவட்டத்துக்கு கொண்டு வர சபாநாயகர் அப்பாவு மற்றும் திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் தமிழக அரசு மற்றும் மத்திய பாதுகாப்புத் துறையிடம் முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பேரிடர் மீட்பு மையத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து கடந்த மாதம் மீனவர்கள் குறைதீர் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கார்த்திகேயன், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடிக்கடி புயல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அந்த நேரங்களில் மீட்புப் பணிகள் தேவை என்பதால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் ஒரு மையம் நமது நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் வள்ளியூர் பகுதியில் அமைய இருக்கிறது. முதல் கட்டமாக ஒரு டீம் வருவார்கள், ஒரு வருடத்தில் முழுமையாக மீட்புக் குழுவினர் வருவார்கள். 3 மாதத்துக்குள் அதுகுறித்த அறிவிப்பு உங்களுக்கு வரும் என்றார்.

இந்த நிலையில், ஆட்சியரின் தகவலை தொடர்ந்து, தற்போது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள மாணவர் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்பு மையம் செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த தேசிய பேரிடர் மீட்பு மையம் அமைவதற்கான பணியை தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் நான்காவது பிராந்தியம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அமையப்பட உள்ளது. மொத்தம் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும். அதிநவீன மீட்பு உபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் இந்த மண்டல மையம் செயல்பட உள்ளது.

நிரந்தரமாக தேசிய பேரிடர் மையம் அமைவதற்கு வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பகுதிகளில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, இனி பெரு வெள்ளம், புயல், மழை போன்ற பேரிடர் நேரங்களில் தேசிய பேரிடர் குழுவினர் அரக்கோணத்தில் இருந்து வர வேண்டியிருக்காது, திருநெல்வேலியில் குழு இருப்பதால் உடனடியாக பேரிடர் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட முடியும்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்டபோது, கடந்தாண்டு தேசிய பேரிடர் குழு அதிகாரிகள் இங்கு வரும்போது திருநெல்வேலியில் ஒரு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அதைத் தொடர்ந்து அவர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

பின்னர், மாநில அரசும் நமக்காக பரிந்துரை செய்து இந்த மையத்தை இங்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் வரை பேரிடர் நேரத்தில் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட முடியும். முதல் கட்டமாக குறைந்த அளவில் வீரர்கள் வருவார்கள். அடுத்த சில ஆண்டுகளில் மையம் முழுமையாக செயல்படும். முதலில் தேசியப் பேரிடர் மீட்பு மையம் இங்கு வருவதே பெரிய விஷயம் என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:விஜயின் செல்வாக்கை தீர்மானிக்கப் போகும் 2026.. ஒரு வருடம் க்ரூஷியல்.. நினைத்தாலே பதறுதே!

ABOUT THE AUTHOR

...view details