காஞ்சிபுரம்:சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சிஐடியு தொழிற்சங்கம் அமைத்தல், ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 31 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனுமதியில்லா போராட்டமும் கைது நடவடிக்கையும்:இந்த நிலையில் 31வது நாளான இன்று சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போலீசாரின் அனுமதியின்றி தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 617 தொழிலாளர்களையும், சிஐடியு தொழிற்சங்க மாநில செயலாளர் சௌந்தரராஜன், மாவட்டத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்து, சுங்குவாசத்திரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
ஊழியர்களை சந்தித்து ஆதரவளித்த தலைவர்கள்:இதையடுத்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்க பாலு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமத் உள்ளிட்டோர் நேரில் சென்று அவர்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் கூறுகையில், "போராடி வரும் தொழிலாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் நிர்வாகத்தில் எடுபிடியாக இருக்கும் நபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக அறிவிப்பது ஒரு நல்ல ஜனநாயகம் இல்லை.
தொழிலாளர்களுடன் விரோதப் போக்கை கடைப்பிடிப்பது ஆரோக்யமானது இல்லை. இந்த அரசிற்கு இது நல்ல பெயரை ஈட்டி தராது. எனவே முதலமைச்சரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்துகிறேன்" என்றார்.
இதையும் படிங்க:அமைச்சர் வருகைக்காக ஒத்திவைக்கப்பட்ட விழா; போராட்டத்தில் இறங்கிய பள்ளி மாணவர்களின் பெற்றோர்!