கேரளாவில் கொள்ளை.. தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர்.. ஏடிஎம் கொள்ளை கும்பலின் திக் திக் சம்பவம்! - Namakkal container robbery arrest - NAMAKKAL CONTAINER ROBBERY ARREST
நாமக்கல்லில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கிப்பிடித்ததில் அதில் ஏடிஎம் கொள்ளையர்கள் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது நடவடிக்கையின் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர், பிடிபட்ட கொள்ளையன் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
நாமக்கல்:சேலம், நாமக்கல் மாவட்டங்களின் எல்லையை ஒட்டிய வெப்படை பகுதியில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அடுத்தடுத்த திருப்பங்களும் கேட்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளன.
கேரள மாநிலம் திருச்சூரில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து விட்டதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு கேரளாவின் திருச்சூர் போலீசார் தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஈடிவிபாரத்திடம் பேசிய திருச்சூர் மாநகர கமிஷனர் இளங்கோ, திருச்சூரில் இரண்டு இடங்களிலும் புறநகரிலும் மொத்தம் மூன்று ஏடிஎம்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அனைத்தும் சம்பவங்களிலும் தடயங்கள் ஒரே போன்று இருந்ததாக கூறியுள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த ஏடிஎம்களில் 60 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எந்திரத்தில் பணம் நிரப்பப்பட்ட மறுநாளே வங்கி ஏ டி எம் மையங்களில் கொள்ளை நடந்துள்ளதாக கமிஷனர் இளங்கோ கூறியுள்ளார். காவலாளிகள் இல்லாத ஏடிஎம் மையங்களை தேர்வு செய்து பணம் வைக்கும் இடத்தை மட்டும் கேஸ்கட்டர் எந்திரம் மூலம் வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வழக்கமாக காரில் சென்று கொள்ளையை அரங்கேற்றம் செய்த பின்னர், காருடன் கண்டெய்னர் லாரியில் ஏற்றிவிட்டு தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அனைத்து விவரங்களும் கேரள போலீசார் சார்பில் தமிழ்நாடு போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் SK LOGISTICS என்பதை LOGITICS என ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் எழுதியிருந்த லாரி குறித்த அடையாளங்களும் தெரியப்படுத்தப்பட்டன.
போலீசார் சேசிங் செய்து பிடித்த காட்சிகள் (Credit - ETV Bharat Tamil Nadu)
இதனையடுத்து தமிழ்நாடு எல்லைக்குள் புகுந்த லாரியை நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பேசிய மேற்கு மண்டல டிஐஜி உமா, நாமக்கல் மாவட்ட எல்லையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கேரள மாநில போலீசார் முன்கூட்டியே தெரிவித்திருந்த தகவலின் படி, Creta கார் மற்றும் கண்டெய்னர் லாரிகளை குறி வைத்து சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது குறிப்பிட்ட கண்டெய்னர் லாரி சோதனைச் சாவடியில் நிற்காமல் போலீசாரைத் தாண்டிச் சென்றது. இதனையடுத்து போலீசார் அந்த வாகனத்தை துரத்திச் சென்றதாக டிஐஜி உமா கூறினார். அப்போது போலீசாரிடம் சிக்காமல் தப்புவதற்காக வழியில் தென்பட்ட பொதுமக்களின் வாகனங்களின் மேல் இடித்து விட்டு லாரி தப்பிச் சென்றதாகவும், பின்னர் டோல்கேட் வந்ததால் யூடர்ன் எடுத்து சங்ககிரி சாலையில் மீண்டும் சென்றதாக குறிப்பிட்டார். இதனையடுத்து சன்னியாசிப்பட்டி பகுதியில் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்து பிடித்ததாகக் கூறினார்.
இதனையடுத்து கண்டெய்னர் லாரியின் டிரைவர் கேபினில் இருந்த ஓட்டுநர் உட்பட 4 பேரை போலீசார் பிடித்து, அதே ஓட்டுநரைக் கொண்டு லாரியை காவல்நிலையம் நோக்கி கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பூட்டப்பட்ட கண்டெய்னரில் ஏதோ இடிப்பது போன்று சத்தம் கேட்டதால், லாரியை நிறுத்தி சோதனை செய்ததாகவும் அப்போது ஜமாலுதீன் (40) என்ற ஓட்டுநர் கண்டெய்னரை திறந்து காட்டியதாகவும், கண்டெய்னரின் உள்ளிருந்து அசார் அலி (28) என்ற நபர் கையில் பணத்துடன் இறங்கி ஓடியதாகவும் டிஐஜி உமா கூறினார்.
அசார் அலியை பிடிக்க முயன்ற போது ஜமாலுதீன் கையில் இருந்த கூர்மையான பொருளால் உதவி ஆய்வாளர், ரஞ்சித்குமார் மற்றும் ஆய்வாளர் தவமணியை தாக்கியதாக உமா கூறினார். எனவே ஆய்வாளர் தவமணி துப்பாக்கியால் சுட்டதில் மார்பில் தோட்டா பாய்ந்து ஜமாலுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அசார் அலி என்பவனின் காலில் தோட்டா பாய்ந்தது.
இதனையடுத்து கண்டெய்னரின் பின்னால் பதுங்கியிருந்த மேலும் 3 பேரையும் கைது செய்துள்ளதாகவும், டிஐஜி உமா கூறியுள்ளார். குற்றவாளிகள் கைது குறித்த தகவல் அறிந்ததும். கேரள மாநில போலீசாரும் நாமக்கல் வந்துள்ளனர். தடயவியல் உள்ளிட்ட தொழில்நுட்ப விசாரணைகளுக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும் என டிஐஜி உமா கூறினார்.
கைதானவர்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய டிஐஜி, இவர்கள் ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட லாரியில் சரக்குகளை ஏற்றி தமிழ்நாட்டில் சென்னையில் இறக்கியதாகவும். பின்னர் கேரளாவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுடன் சேர்ந்து காரை கடத்திக் கொண்டு தமிழ்நாடு வழியாக வடமாநிலம் நோக்கி செல்லும் வழியில் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே கிளிக் செய்யவும்