இராமநாதபுரம்: தமிழகத்தின் நீண்ட கடலோரப் பகுதிகளை கொண்ட மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ள இராமநாதபுரத்தில், உலக அளவில் பிரசித்த பெற்ற ஆன்மிக தலமான ராமேஸ்வரம் அமைந்துள்ளது. திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் ஆகிய வழிப்பாட்டு தலங்களும் இம்மாவட்டத்தில்தான் அமைந்துள்ளன.
இராமநாதபுரம் தொகுதியில் வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் காலை 9.43 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் (ஏணி சின்னம்) நவாஸ் கனி 2400 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பரமக்குடி தொகுதியில் 1710 வாக்குகளும், முதுகுளத்தூர் தொகுதியில் 1215 வாக்குகளும் முன்னிலை என தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தொகுதிகள்: அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி(தனி), திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கியது, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி.
இத்தொகுதியில் கடந்த 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டது.. தொழிலதிபர் நவாஸ் கனி அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அமமுக சார்பில் வி.டி.என். ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் புவனேஸ்வரி உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
2019 தேர்தலின்போது, இரமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,57,910 ஆக இருந்தது. இதில் ஆண் வாக்காளர்கள் 775765, பெண் வாக்காளர்கள் 782063, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 82 பேர். இவற்றில் மொத்தம் பதிவான வாக்குகளில் நவாஸ் கனி4,69,943 வாக்குகளை அள்ளினார். இவருக்கு அடுத்ததாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3,42,821 வாக்குகளை பெற்றார். 1.25 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றார். அமமுக வேட்பாளர் வி.டி.என். ஆனந்த் 1,41,806 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரி 46 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகளையும் பெற்றனர்.
களத்தில் ஆறு ஓபிஎஸ்கள்: இத்தொகுதியில் கடந்த முறை இந்தியன் யூனியன் முஸ்லீம் லிக் வெற்றிப் பெற்றதால், இந்த முறையும் திமுக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதி அக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்கட்சியின் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் களமிறங்கி உள்ளார். அவருக்கு ஏணி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஜெயபெருமாள், பாஜக கூட்டணியின் ஆதரவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரியா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது பெயரிலேயே மேலும் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபும் தொகுதியின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 16,06,014. இவர்களில் ஆண் வாக்காளர்கள் - 7,96,989, பெண் வாக்காளர்கள் - 8,08,.942 மற்றும் இதர வாக்காளர்கள் - 83. இத்தேர்தலில் இங்கு மொத்தம் 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
வெற்றி யாருக்கு?:முஸ்லீம் சமூகத்தினர் கணிசமாக உள்ள தொகுதி என்பதால், திமுக கூட்டணியில் இ்தொகுதி மீண்டும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிட்டிங் எம்.பி.யாக உள்ள நவாஸ் கனிக்கு எதிராக தொகுதியில் கொஞ்சம் அதிருப்தி குரல்கள் ஒலிப்பதாகவே தெரிகிறது. அதேசமயம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜக கூட்டணியின் ஆதரவோடு களமிறங்கி உள்ளதால், இவர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த இருமுனைப் போட்டியில் வெல்லப் போவது யார் என்பதற்கான விடை ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க:தேர்தல் 2024: திருவண்ணாமலை தொகுதியை தக்க வைக்குமா திமுக, தட்டிப்பறிக்குமா அதிமுக? கள நிலவரம் என்ன?