சென்னை: இந்தாண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-2025 கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (பிப்.13) தொடங்கியது. இதில் சட்டபேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அதன் மீதான விவாதத்திற்கு முன்பு மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கபட்டது. முதலாவதாக பேசிய சபாநாயகர் அப்பாவு, உயிரிழந்த தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், முன்னாள் உறுப்பினர் வடிவேல், ஏ.தெய்வநாயகம், எம்.தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ்.ராஜசேகரன் மறைவுற்ற செய்தியை வருத்துத்துடன் பேரவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
அந்தவகையில், அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்படி, மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டு அனைத்து மக்களாளும் அன்போடு 'கேப்டன்' என்று அழைக்கபட்டவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என புகழாரம் சூட்டி சட்டபேரவையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதில் எதிர்க்கட்சி தலைவராக இருந்து மறைந்த விஜயகாந்திற்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசிக்கும் போது, தேமுதிக தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும், திறம்பட செயலாற்றி மக்களால் அன்போடு 'கேப்டன்' என்று அழைக்கபட்டவர், விஜயகாந்த். அவருடைய மறைவைக் கேட்டு துயரமடைந்ததாகவும், அவரின் மறைவால் வாடும் அவரின் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள், நடிகர்கள் அனைவருக்கும் இந்த சட்டப்பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறி, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேபோல, ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நிதித்துறை செயலாளராக இருந்த எஸ்.வெங்கடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டத் தொடரின் வினாவிடை நேரத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி, அரக்கண் கோட்டை கால்வாய் பாதி பகுதிகள் 40.50 கோடி செலவில் 100% பணிகள் வெற்றி. கூடுதல் பணிகளுக்கு தேவைப்படும் நிதி பார்த்து பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
தொடர்ந்து பேசிய எம்எல்ஏ செங்கோட்டையன், 'கடந்த அதிமுக ஆட்சியில் நிதிகள் ஒதுக்கப்பட்டு சிமெண்ட் தளங்கள் அமைக்கப்பட்டது. 50 சதவீத பணி முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 50 சதவீத வாய்க்கால்களுக்கு சிமெண்ட் தளம் அமைக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அதேபோல கோவை ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் கணவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது நிறைவேற்றினார். அத்திக்கடைவு அவிநாசி திட்டப் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள குளங்கள் கண்மாய்களுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கிளைவாய்க்கால் செங்கம் பிரிவு வாய்கால், நெடுநாள் முன்பு வெட்டப்பட்ட வாய்க்கால். அடிக்கடி அந்த கிளைவாய்க்கால் உடைகிறது. வெள்ளப்பெருக்கு போது வாய்க்கால் உடைகிறது. அதன் சீரமைப்பு பணிகள் இந்த ஆண்டே நடத்த அரசு முன்வருமா? எனக் கேள்வியெழுப்பினார். இதற்கு அமைச்சர் துரைமுருகன், 'கேள்வி பெரு வாய்க்கால், துணை கேள்வி துணை வால்காய் அரசு அதனை செய்து தரும்' எனப் பதிலளித்தார்.
மேலும் பேசிய எம்எல்ஏ செங்கோட்டையன், அவிநாசி அத்திகடவு பணிகள் 95% முடிக்கப்பட்டன. மீதமுள்ள பணிகள் நிறைவு செய்துள்ளது. இதையடுத்து சோதனை ஓட்டம் நடைபெறுமா? எனக் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், 'பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டது. சில இடங்களில் குழாய் பதிக்கும் இடத்தில் நில உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை தர வேண்டிய நிலை உள்ளது. அதை கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் துவக்கவிழாவை நடத்தலாம்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!