தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான் ரெடி...நீங்க ரெடியா? களம் காணத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்! - TAMIL NADU JALLIKATTU FESTIVAL

மதுரையில் ஜல்லிக்கட்டு கோலாகலம் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் தன்னுடைய காளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வரும் தீபக், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 18 hours ago

Updated : 17 hours ago

மதுரை: தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு இடையே, மதுரை நகரமே அதிரும் வகையில் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்க உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்கும் தன்னுடைய காளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதுடன், போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், கமிட்டிகள், தமிழ்நாடு அரசு ஆகியோர் ஜல்லிக்கட்டுக்காக செய்ய வேண்டியவை குறித்து மாடுபிடி வீரர் கரிசல்குளம் தீபக் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14 அன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15 அன்று பாலமேட்டிலும், ஜனவரி 16 அன்று அலங்காநல்லூரிலும் தமிழ்நாடு அரசின் சார்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கான இணைய வழி பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில, காளைகளும், மாடுபிடிவீரர்களும் போட்டிகளில் பங்கேற்க தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் தன் காளைகள் குறித்து பேட்டியளித்த மாடுபிடி வீரரான தீபக் (ETV Bharat Tamil Nadu)

காளைகளுக்குப் பயிற்சி:

இந்நிலையில் மதுரை அருகே கரிசல்குளத்தில் வசிக்கும் மாடுபிடி வீரர் தீபக், போட்டிகளில் பங்கேற்க உள்ள ராமு, சூரி உள்ளிட்ட தன்னுடைய காளைகளுக்கு நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, நீச்சல்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார். மேலும் காளைகளுக்கு சிறப்பான தீவனங்களையும் உணவாகக் கொடுத்து ஊக்குவித்து வருகிறார்.

மாடுபிடி வீரர் கரிசல்குளம் தீபக் பேட்டியளித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய தீபக், தான் கடந்த 34 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருவதாகவும், நமது முன்னோர்கள் வழிகாட்டிய அடிப்படையில் இந்த பாரம்பரியமான ஜல்லிக்கட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறேன் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் 7 மாவட்டங்களில் தனது காளைகளை அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்று வருவதாகக் கூறும் இவர், வடமாடும், ஜல்லிக்கட்டு மாடுகளும் தன்னிடம் உள்ளதாகக் கூறினார். இந்த 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக காளைகளைத் தயார்ப்படுத்தி வரும் தீபக், ஆண்டு முழுவதும் இதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

பிள்ளைகளாக வளர்க்கப்படும் காளைகள்:

தங்களின் சொந்த பிள்ளைகளைப் போலவும், உடன்பிறந்தோரைப் போலவும் தான் காளைகளை வளர்ப்பதாக தீபக் சிலிர்ப்புடன் கூறினார். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளில் பங்கேற்க இணையவழியில் இவர் பதிவு செய்துள்ளார்.

போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக காளைகளுக்கு நாள்தோறும் நடைப்பயிற்சியுடன், தண்ணீரில் நீச்சல் அடிப்பதன் மூலமாக மூச்சுப் பயிற்சியும், முதுகெலும்பு வலுத்தன்மைக்காக மண் மேடுகளைக் கொம்பால் குத்தும் பயிற்சியும் வழங்குகின்றனர். ஆனால், தற்போதைய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் முறை அதிருப்தி அளிப்பதாகக் கூறுகிறார் தீபக்.

தண்ணீரில் பயிற்சிபெறும் ஜல்லிக்கட்டு காளைகள் (ETV Bharat Tamil Nadu)

விளையாடும் பணம்:

தொடர்ந்து பேசிய தீபக், "இணையவழியில் பதிவு செய்கின்ற முறை சிறப்பாக இருந்தாலும், இந்த முறை அவனியாபுரத்தில் 2 ஆயிரம், அலங்காநல்லூரில் 5 ஆயிரம், பாலமேட்டில் 4 ஆயிரம் காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் வெளிப்படைத்தன்மையோடு நடைபெற வேண்டும்.

இதில் தேவையற்ற வகையில் பணபலம், அரசியல், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. அதேபோன்று பரிசுகளைப் பொறுத்தவரை முன்பெல்லாம் கோயில் மாடுகள் என்றால் குத்துவிளக்கு, அண்டா, வேட்டி-துண்டு மட்டுமே பரிசாக வழங்கப்பட்டன. லட்சக்கணக்கில் மதிப்புள்ள கார்கள் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதால் போட்டி, பொறாமை அதிகமாகிறது.

இதையும் படிங்க
  1. பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு போட்டி: வெளியானது அரசின் வழிக்காட்டு நெறிமுறைகள்!
  2. திருச்சி ஜல்லிக்கட்டில் அதகளம் செய்த காளையா இது.. எவ்ளோ ஏலத்துக்கு போச்சுன்னு தெரியுமா?
  3. 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பிள்ளை கொத்தூர் எருது விடும் விழா!

இது வீரத்தை விலைக்கு வாங்குவதைப் போன்ற நிலை உருவாகிறது. முன்பெல்லாம் நல்ல மாட்டின் பெயர் அறிவிக்கப்பட்டால், அதனை எதிர்கொண்டு வீரர்கள் விளையாடுவார்கள். ஆனால் தற்போது எண்ணிக்கையின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படுவதால், சாதாரண மாடுகளை எதிர்கொண்டு, வீரர்கள் தங்களது வீரத்தையே குறைத்து மதிப்பிடச் செய்துவிடுகிறார்கள்.

அரசியல் வேண்டாம்:

மாடுபிடிவீர்கள் சிறந்த மாடுகளைப் பிடித்து பேர் வாங்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். பரிசுக்கு ஆசைப்பட்டு உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம். அதேபோன்று விழாக்கமிட்டிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அங்கு அரசியல்வாதிகள் அதிகாரிகளின் தலையீட்டிற்கு அனுமதி அளிக்கக்கூடாது. இதனால் உள்ளூர் மாடுகள் உள்ளூரிலேயே அவிழ்க்க முடியாத சூழல் உருவாகிறது," என்றார்.

மேலும், கார், பைக் போன்ற பரிசுப்பொருட்களை தவிர்த்து, அவற்றிற்கான தொகையை களமிறங்கும் அனைத்துக் காளைகளுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்க முன் வர வேண்டும் என்று கூறினார். தற்போதுள்ள சூழலில் மாடு வளர்ப்பதே பெரும் சவாலாக உள்ளது. 30 கி.மீ. சுற்றளவில் ஒரு போட்டிக்கு காளைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது என்றும் தீபக் வருத்தம் தெரிவித்தார்.

Last Updated : 17 hours ago

ABOUT THE AUTHOR

...view details