திருநெல்வேலி:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள, 27 பேருந்துகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பேருந்தில் சட்டப்பேரவை தலைவர், அமைச்சர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது, "போக்குவரத்து துறை சிரமமான சூழலுக்கு சென்ற நிலையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அதனை மீட்டு மீண்டும் புத்துயிர் ஊட்டியுள்ளார். மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கான நிதியை முதலமைச்சர் ஒதுக்கியதால் தான், போக்குவரத்து துறையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் ஊதியம் வழங்க முடிகிறது. மேலும் டீசல் மானியம் போன்றவற்றால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் 20% பேருந்துகள் கூட அரசின் மூலம் இயக்கப்படுவது கிடையாது. தமிழகத்தின் குக்கிராமம் வரை பேருந்துகள் அரசின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன என்றார்.