சென்னை:இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர், புரட்சித்தலைவி அம்மா மாளிகையை காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "டெல்லியில் அதிமுக அலுவலகம் அமைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததையடுத்து பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் திட்டத்தின் 80 சதவீதப் பணிகளை முடித்தார். அதற்குப் பிறகு வந்த திமுக அரசு, இந்த திட்டத்தை வேண்டும் என்றே மூன்று வருடங்கள் கிடப்பில் போட்டது. விரைந்து முடித்தால் அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதற்காக காலம் தாழ்த்தி இந்த திட்டத்தை திமுக அரசு முடித்துள்ளது.
இதையும் படிங்க:இபிஎஸ் பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? செங்கோட்டையன் விளக்கத்தால் அதிமுகவில் சலசலப்பு!
இந்தத் திட்டம் வருவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்தான் காரணம். இதன் காரணமாகவே அத்திக்கடவு அவிநாசி விவசாயிகள் கூட்டமைப்பு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழாவை நடத்தியது. மத்திய பட்ஜெட்டில் ஏழை எளிய மக்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. நிதி நிலை அறிக்கையில் திருக்குறள் இடம் பெற்றிருந்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. மாநில உரிமையை காப்போம் என பேசி வரும் திமுக மத்திய அரசிடம் மாநில உரிமையை போராடி பெறவில்லை. மு.க.ஸ்டாலின் அரசை பொறுத்தவரை நாட்டு மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை, தாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கூடியவராவார்.
பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாடு தொடரும். தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திருமாவளவன் வெளிப்படையாக சொல்லவில்லை. தலித்களுக்காக செயல்பட்ட அந்த இயக்கம் இப்போது திசை மாறி செல்கிறது. இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தல் தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. ஆதலால் அதனை இடைத்தேர்தல் என்று கூற முடியாது. அது தேர்தலே அல்ல,"என்றார்.