சென்னை: ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்கு மே 7ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை வாகனங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்ல உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நாளை (மே 6) முதல் epass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வந்து செல்ல எந்த தடையும் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இப்படி கோடை காலங்களில் அவர்களின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாகத் தெரிவித்து விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
கோடை விடுமுறையைக் கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.