தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் கட்டணம் உயர்வு; இவர்களுக்கெல்லாம் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை - மின்சார வாரியம் கூறிய பதில்! - TNEB Explains EB Bill Tariff Hike - TNEB EXPLAINS EB BILL TARIFF HIKE

TNEB Explains EB Bill Tariff Hike: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின் கட்டண உயர்வின் அவசியம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மின் மீட்டர் கோப்புப்படம்
மின் மீட்டர் கோப்புப்படம் (Credits - TANGEDCO X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 8:47 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு ஜூலை 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டண உயர்வின் அவசியம் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “கடந்த 2011-2012 ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 954 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், 94 ஆயிரத்து 312 கோடி ரூபாய் மேலும் அதிகரித்து, 31.03.2021 வரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 266 கோடி ரூபாயாக உயர்ந்தது.

அரசுக்கு வங்கிகளிடம் கடன் வாங்கும் கட்டாயம்:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை, 2021-22ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இதன் விளைவாக, 2011-12ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு 43 ஆயிரத்து 493 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகையானது, கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-22) வரை 1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாயாக மாறியது. இதன் விளைவாக, கடந்த 2011-12ஆம் ஆண்டில் 4.588 கோடி ரூபாயாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259 சதவீதம் அதிகரித்து 2020-21ஆம் ஆண்டில் 16 ஆயிரத்து 511 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இவ்வாறு அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னர், அதிகமான மின்கட்டண உயர்வினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய சுமையினை கருத்தில் கொண்டு, இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும். இந்த வகையில், 2022-23 நிதி ஆண்டிற்கான மின் கட்டண உயர்வானது, 01.04.2022-க்கு மாறாக 10.09.2022 முதல் சுமார் 7 மாதத்திற்கு மட்டுமே உயர்த்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல்லாண்டு மின் கட்டண வீத ஆணையின் படி கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நுகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில், அனைத்து மின்னிணைப்புகளுக்கும் உயர்த்தப்பட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மின் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வும் முழுவதுமாக அரசே மின் மானியம் மூலம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதினால் பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தி 15.07.2024 தேதியிட்ட மின் கட்டண ஆணை 6:6/2024 -ஐ வெளியிட்டுள்ளது.

இந்த மின் கட்டண உயர்வின் முக்கிய அம்சங்கள்:தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.

  1. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
  2. வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண் 222-ன் படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால், அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயன் அடைவர்.
  3. தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
  4. இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 5 ரூபாய் வரை மட்டுமே உயரும்.
  5. இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 35 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 15 ரூபாய் வரை மட்டுமே உயரும்.
  6. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 25 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 25 ரூபாய் வரை மட்டுமே உயரும்.
  7. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 13 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 40 ரூபாய் வரை மட்டுமே உயரும்.
  8. 2.19 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.
  9. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றிற்கு 20 பைசா, 1501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 25 காசுகள் மட்டுமே உயரும்
  10. தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிக குறைந்த அளவில் யூனிட்ஒன்றிற்கு 35 பைசா மட்டுமே உயரும்.
  11. 22.36 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 15 ரூபாய் மட்டுமே உயரும்.
  12. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு பைசா 35 மட்டுமே உயரும்.
  13. உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா மட்டுமே உயரும்.
  14. நிலையான கட்டணங்கள் (Fixed Charges) கிலோவாட் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கு 3 ரூபாய் முதல் 27 ரூபாய் வரை மட்டுமே உயரும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை; தமிழ்நாடு மின்சார வாரியம்! - TANGEDCO

ABOUT THE AUTHOR

...view details