தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகர் தெற்கு, வடக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் புது கிராமத்தில் உள்ள ஏ.எஸ்.கே.ஆர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்தியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிதிநிலை அறிக்கை தேசத்திற்கான நிதிநிலை அறிக்கையா அல்லது ஆந்திரா, பீகாருக்குமான நிதிநிலை அறிக்கையா என்பதை நிதி அமைச்சர் சொல்ல வேண்டும்.
நிதிநிலை அறிக்கை என்பது மத்திய அரசால் போடப்படுவதாகும். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை ஆந்திரப் பிரதேசத்திற்கும், பீகாருக்கும் எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் என்பது தெரியவில்லை. இதைத்தான் சந்தர்ப்பவாதம், பாசிசம் என்கின்றோம். மோடி ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆதரவு அளித்ததன் பேரில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள நிதியை எடுத்து இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் கொடுப்பது நியாயமா? இதைத்தான் பாசிச ஆட்சி என்று கூறுகின்றோம்.
இவர்கள் யாரையும் பொருட்படுத்த மாட்டார்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியை தற்காலிகமாக தற்காத்து கொள்வதற்காக இப்படிப்பட்ட பெரிய தவறை நிதி அமைச்சகம் செய்திருக்கின்றது.. இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
ரூ.15,000 கோடி மழைக்கால வெள்ள நிவாரண நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 15,000 கோடி தமிழ்நாடிற்கோ அல்லது புதுச்சேரிக்கோ கிடையாது. கடந்த டிசம்பர் மாதம் தென் தமிழகத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.